ஜார்ஜ் டவுன் – பினாங்கில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடமொன்றில் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய மலைப்பாம்பு, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மதியம், பாயா தெருபோங் என்ற இடத்தில் இருந்த கட்டுமானத் தளத்தில், மரம் ஒன்றின் அடியில் இருந்த அந்தப் பாம்பை சிவில் தற்காப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் மீட்டனர்.
அதன் எடை 250 கிலோ என்றும், நீளம் 8 மீட்டர் என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்காவிலுள்ள மிசௌரி என்ற இடத்தில் இருக்கும் மெடுசா என்ற மலைப்பாம்பு தான் உலகின் மிக நீளமான பாம்பு என்ற கின்னஸ் சாதனையை இதுவரைத் தக்க வைத்திருந்தது. மெடுசாவின் எடை 158.8 கிலோ ஆகும்.
இந்நிலையில், அதை விட 90 கிலோ எடை அதிகமுள்ள பினாங்கு மலைப்பாம்பு அதன் மெடுசாவின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், கின்னஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பினாங்கு பாம்பை ஆய்வு செய்த பின்னரே அப்பாம்பு புதிய சாதனை படைக்குமா? என்பது உறுதியாகும்.
படம்: நன்றி (Bernama)