தோக்கியோ – ஜப்பானின் கியூஷூ தீவுப் பகுதியை கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 14) நிலநடுக்கம் தாக்கிய பாதிப்புகள் முடிவடையாத அடுத்த நாளிலேயே இரண்டாவது நிலநடுக்கம் தென் ஜப்பானை உலுக்கியுள்ளது.
7.1 ரிக்டர் அளவு கொண்ட வலுவான நிலநடுக்கம், நேற்று சனிக்கிழமை தென் ஜப்பானைத் தாக்கியதில் இதுவரை 3 பேர் மரணமடைந்திருக்கலாம் என்றும் இடிந்து விழுந்திருக்கும் கட்டிடங்களுக்கு இடையில் பலர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
அமெரிக்க நில ஆய்வு மையம் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிட்ட மேற்கண்ட வரைபடம் 7.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் நட்சத்திர சின்னம் குறியிடப்பட்ட இடத்தைத் தாக்கியுள்ளதைக் காட்டுகிறது
முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள 3 அணு உலைகளில் இதுவரை எந்தவிதப் பாதிப்பும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த முதல் நிலநடுக்கத்தில் இதுவரை 9 பேர் மரணமடைந்திருப்பதோடு, சுமார் 1,000 பேர் காயமடைந்துள்ளார்கள்.
நேற்றைய நிலநடுக்கத்தினால் பல இடங்களில் தீவிபத்துகள் நிகழ்ந்தன என்றும் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்திருக்கும் கட்டிடங்களில் சுமார் 80 பேர்வரை சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
காவல் துறை, தீயணைப்புப் படை, மருத்துவ குழு உள்ளிட்ட சுமார் 15,000 பேர் கொண்ட மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி விரைந்துள்ளனர்.
தென் ஜப்பானின் குமாமோட்டோ என்ற நகரை மையமிட்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த இரண்டாவது நிலநடுக்கம் உருவாகியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 730,000 மக்கள் தொகை கொண்ட இந்த நகர் முழுவதும் தற்போது மின்தடையினால் இருளில் மூழ்கியுள்ளது.
நிலநடுக்க சம்பவம் குறித்து கருத்துரைத்த ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, நிலநடுக்கத்தின் பாதிப்புகள் முழுமையாக கண்டறியப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், துரிதமான மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், சரியான, முறையான தகவல்கள் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.