குயித்தோ – இக்குவேடோர் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 415-ஆக உயர்ந்துள்ளது. இக்குவேடோரின் குயித்தோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இக்குவேடோரில் கடந்த சனிக்கிழமை இரவு 11.58 மணிக்கு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நடுக்கம் 7.8 ஆகவும் பதிவாகியிருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 130-க்கும் அதிகமான முறை நில அதிர்வு உணரப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சாலைகளில் தங்கி வருகின்றனர்.