குயித்தோ – இக்குவேடோரில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6 ஆக பதிவானது. தொடர்ந்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தென்அமெரிக்க நாடான இக்குவேடோரில் கடந்த 16-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 602-ஆக அதிகரித்தது. மேலும் 430 பேரைக் காணவில்லை. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,492-ஆக உள்ளது.
26,000 பேர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். ஏழாயிரம் கட்டடங்கள் முற்றிலும் தகர்ந்தன. மேலும் 2,700 கட்டடங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வசதி படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருப்பிடங்களை இழந்தவர்கள் தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு மற்றும் உதவிப் பொருள்கள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று குயித்தோ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்குவேடோரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, முதல் கட்டமாக, 7.25 கோடி டாலர் அளிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கூறியுள்ளார். ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம் மற்றும் தென்அமெரிக்க நாடுகள் தொடர்ந்து நிவாரண உதவிகளை அனுப்பி வருகின்றன.
நிதி நிலைமையைச் சமாளிக்க அந்த நாட்டு அரசு பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
நெடுஞ்சாலைகளில் குடும்பம் குடும்பாக வரிசையாக நிற்கும் மக்கள் சைகை காட்டி உணவு, தண்ணீர் கோருகின்றனர். நிவாரண முகாம்களில் மிக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.