Home Featured தமிழ் நாடு கருணாநிதி-ஜெயலலிதா-வைகோ உள்பட பலர் இன்று வேட்புமனு தாக்கல்!

கருணாநிதி-ஜெயலலிதா-வைகோ உள்பட பலர் இன்று வேட்புமனு தாக்கல்!

726
0
SHARE
Ad

karunanidhi-jayalalitha-vaiசென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் வைகோ,  திருமாவளவன், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழகம், புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு வரும் 16-ஆம் தேதி  தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி  தொடங்கியது. அன்றைய தினம் 83 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேசமயம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல்  செய்யவில்லை. சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் நல்ல நாள்,  நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று சித்தயோகம், சங்கட கர சதுர்த்தியுடன் சுப முகூர்த்த தினம் ஆகும்.

#TamilSchoolmychoice

மேலும் காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை எமகண்டம் என்பதால் 12 மணிக்கு மேல் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  செய்ய முடிவு செய்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி 2-ஆவது முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இன்று மதியம் மனு தாக்கல்  செய்கிறார். இதே போல பெரும்பாலான திமுக வேட்பாளர்களும்  இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதே போல சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடும் ஜெயலலிதா பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள 14-ஆவது மண்டல  அலுவலகத்தில் காலை 12.45 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதிமுக வேட்பாளர்களை வரும் 28-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்  செய்ய கட்சி  தலைமை அறிவுறுத்தியுள்ளது.

காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும்  பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

வேட்பு மனுக்களை வரும் 29-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 30-ஆம் தேதி நடக்கிறது. மே 2-ஆம் தேதி மனுக்கள்  வாபஸ் பெற கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினமே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னமும்  ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.