ஈப்போ – ஈப்போவில் நேற்று மாலை ஜாலான் ஹாஸ்பிடல் என்ற பகுதியில் அமைந்திருந்த இந்து ஆலயம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த உருவச் சிலைகளை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியிருப்பது நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் தனது காரில் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த அந்நபர், காரை அங்கு நிறுத்திவிட்டு, இரும்பு கம்பி ஒன்றை எடுத்து இப்பாதகச் செயலைச் செய்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீ மூனீஸ்வரன் அம்மன் கோவில் ஆலைய குழு உறுப்பினர் கூறுகையில், “அந்நபர் கையில் வெட்டுக்கத்தி வைத்திருந்ததாக ஆலயத்தின் துணை குருக்கள் கூறுகின்றார். பின்னர் தனது காரில் இருந்து இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து நவக்கிரகச் சிலைகளை உடைக்க ஆரம்பித்திருக்கிறார்”
“அதன் பின்பு, முதன்மை வழிபாட்டுப் பகுதிக்கு சென்ற அந்நபர், அங்கிருந்த அலங்கார சிலைகளை அடித்து நொறுக்கியிருக்கிறார். முதன்மைப் பீடத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அந்நபரால் அதற்கு மேல் நுழைய முடியாமல் மேலும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது” என்று ஆலய குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வி.இளங்கோ, மந்திரி பெசார் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஜம்ரி தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதோடு, ஆலயத்தில் சேதமடைந்த பகுதிகளைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பார் என்று இளங்கோ கூறியுள்ளார்.
இதனிடையே, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சிலைகளை உடைத்த நபர், காரை வேகமாகச் செலுத்திச் சென்ற போது விபத்திற்குள்ளாகியுள்ளது.
அதன் பின்னர், அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதை ஈப்போ ஓசிபிடி துணை ஆணையர் சம் சாங் கியாங் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவருக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என்றும், அவரைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவோம் என்றும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்திற்குள்ளான அந்நபரின் காரில் பின்னால் சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு நிறத்திலான இரு கொடிகளையும் காவல்துறைக் கைப்பற்றியுள்ளனர்.
இதனால், அந்நபர் உண்மையில் மனநல பாதிப்பு உடையவரா? அல்லது ஏதேனும் இயக்கத்தின் தூண்டுதலா? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
முழு விசாரணை நடைபெறும் வரை யாரும் நாட்டில் இனவாதப் பிரச்சனைகளைக் கிளப்ப வேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.