குயித்தோ – இக்குவேடோர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அந்த நாட்டில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 480 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 1700 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: ஈக்வடார் கடலோரப் பகுதியில், அந்த நாட்டின் மியூஸ்னே நகருக்கு மேற்கே, 25 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை காலை 8.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஈக்வடார் தலைநகர் கீட்டோ, மிகப் பெரிய நகரமான குவாயகில் ஆகியவற்றில் உணரப்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, அந்த நாட்டின் பசிபிக் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 480 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 1,700 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.