Home Featured உலகம் யானை மரணம்: அங்கோர்வாட் யானை சவாரிக்கு எதிராகப் பலர் போர்கொடி!

யானை மரணம்: அங்கோர்வாட் யானை சவாரிக்கு எதிராகப் பலர் போர்கொடி!

946
0
SHARE
Ad

ele1அங்கோர்வாட் – கம்போடியாவில் பிரபல சுற்றுலாத்தளமான அங்கோர்வாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலாப்பயணிகளைச் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்த பெண் யானை ஒன்று திடீரென சரிந்து விழுந்து இறந்துள்ளது.

40 – 45 வயது இருக்கலாம் என நம்பப்படும் அந்த யானை பாக்ஹெங் மலை அருகே தனது கடைசி மூச்சை விட்டுள்ளது. முன்னதாக சுற்றுலாப்பயணிகள் இருவரை சுமந்து கொண்டு 40 நிமிடங்கள் நடந்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அந்த யானைக்கு, அதிக வெப்பம் காரணமாகவும், போதுமான காற்றோட்ட வசதிகள் இல்லாததாலும் மாரடைப்பு ஏற்பட்டு இருந்திருக்கலாம் என அதைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதிகளில் சுமார் 40 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, யானை சாலையோரம் சரிந்து கிடக்கும் புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் யெம் செனோக் என்பவர் வெளியிட, அது நட்பு ஊடகங்களில் பரவி, தற்போது 8,000-த்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், அங்கோர் வாட்டில் யானை சவாரியை தடை செய்யக் கோரி இணையம் (change.org petition) வழியாக கோரிக்கை மனு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை அதில் 12,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.