கோலாலம்பூர் – 2013-ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘ஜாலி எல்எல்பி’ என்ற படத்தின் கதையை அதிகாரப்பூர்வமாக அப்படியே தமிழுக்கு மாற்றியிருக்கும் படம் தான் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில், ஐ.அகமட் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் மனிதன்.
நள்ளிரவில் குடித்துவிட்டு கண்மூடித்தனமாக கார் ஓட்டிச் செல்லும் பணக்கார வீட்டு இளைஞன் ஒருவன், சாலையோரையும் பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது காரை ஏற்றி 6 பேரைக் கொன்று விடுகின்றான். இந்த வழக்கில், காவல்துறை உட்பட பல இடங்களில், பணம் தாராளமாக அள்ளி வீசப்பட, அவர்கள் மீது ஏறியது கார் அல்ல, ஒரு லாரி என்று வழக்கு அப்படியே மூடி மறைக்கப்படுகின்றது.
அந்த இளைஞனின் சார்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் புகழ்பெற்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆதிசேஷன் (பிரகாஷ்ராஜ்), அவன் நிரபராதி என்று திறமையாக வாதாடி விடுதலையும் வாங்கிக் கொடுத்துவிடுகின்றார்.
இந்நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்து, கதையின் உள்ளே வருகிறார் ஒரு சாதாரண ஆரம்பநிலை வழக்கறிஞரான சக்தி (உதயநிதி).
உச்சநீதிமன்றத்தையே தனது வாதத் திறமையால் அலற வைக்கும் ஆதிசேஷன், எவ்வளவு கோடி செலவு செய்தாவது தங்களது வாரிசை தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடத் துடிக்கும் திவான் குடும்பம், இவர்களுக்கு நடுவில், ஏழைகளுக்கு நீதி வாங்கித் தர வேண்டுமென்ற நோக்கில் இந்த வழக்கை எடுத்து வாதாடும் சாதாரண வழக்கறிஞரான உதயநிதியின் நோக்கம் வெற்றியடைந்ததா? என்பதை பரபர நீதிமன்ற விசாரணைக் காட்சிகளின் மூலம் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஐ.அகமட்.
நடிப்பு
‘சக்தி’ கதாப்பாத்திரத்தை உதயநிதிக்கு ஏற்றவாறு அதிக ஹீரோயிசம் இன்றி இயல்பாக அமைத்திருப்பதில் வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குநர்.
ஹன்சிகாவுடன் காதல், ஏதாவது சாதித்த பின்பு தான் பெண் கேட்டுச் செல்ல வேண்டும் என்ற சராசரி இளைஞனின் தன்மானம், லஞ்சம் வாங்குவதில் முதலில் குழப்பம் பின்பு தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டு அதை உதறித்தள்ளுவது, நீதிமன்றத்தில் வாதத்தினூடே இயலாமையால் உணர்ச்சிவசப்பட்டு கெஞ்சுவது என உதயநிதியின் நடிப்பு ஈர்க்கின்றது.
முதலில் உதயநிதியின் அப்பாவித்தனம் லேசான வெறுப்பை ஏற்படுத்தினாலும் கூட, அக்கதாப்பாத்திரம் தனது இயல்பான குணத்தை கடைசி வரை தாங்கிச் சென்றிருப்பதால், இரண்டாம் பாதியில் அதை ரசிக்கத் தொடங்கிவிடுகின்றோம்.
ஹன்சிகாவுக்கு இந்தப் படத்தில் வேலை மிகச் சுலபம். நாகரீகமான உடைகளில், குடும்பப் பாங்கான தோற்றத்தில் படம் முழுவதும் வந்து ஈர்க்கிறார். உதயநிதி – ஹன்சிகாவிற்கும் இடையே டூயட் பாடல் கூட இல்லை.
படத்தில் நம்மை மிகவும் கவரும் இன்னொரு கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஸ் தான். தொலைக்காட்சி நிருபராக வந்து தனது மிடுக்கான தோற்றத்தில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆதிசேஷன் கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜும், நீதிபதியாக ராதாரவியும் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். பிரகாஷ்ராஜிடம் முதலில் பணிந்து போவதும், பின்னர் அவரை அடக்கி ஒடுக்குவதுமாக ராதாரவி மிரட்டியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், ராதாரவிக்கு இடையில் வாதம் நடக்கும் அந்த ஒரு காட்சியில் இருவருமே நடிப்பால் அசத்தியிருக்கிறார்கள்.
இவர்களோடு நடிகர் விவேக்கின் காமெடி ஆங்காங்கே கைகொடுத்திருக்கின்றது.
திரைக்கதை, வசனம்
திரைக்கதை அமைப்பைப் பொறுத்தவரையில், முதல் பாதி தொய்வாகவே நகர்கின்றது.
சக்தி எப்படிப்பட்ட வக்கீல்? அவரது குணாதிசியம் என்ன? அவரது நோக்கம் என்ன? ஆகியவற்றைக் காட்ட முயற்சி செய்திருக்கும் அந்த முதல் பாதி அறிமுகக் காட்சிகள் சற்று நீளமாகத் தெரிகின்றது.
அக்காட்சிகளை வேகமாக நகர்த்தி, இடைவேளைக்கு முன்பாகவே கதைக்குள் வந்திருந்தால், நீதிமன்றக் காட்சிகளில் வீரியம் கூட்டி அதை இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.
மாறாக, முதல் பாதியில் ஹீரோ அறிமுகம் எடுத்துக் கொண்ட அதிக நேரம் காரணமாக, பின்பாதியில் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக் காட்சிகள் அவசர அவசரமாக மேலோட்டமாக நகர்த்தப்பட்டிருக்கின்றன.
இதனால், அந்த வழக்கு, சாட்சிகள் மீதான குறுக்கு விசாரணைகள் ஆகியவை மிகச் சுருக்கமாக காட்டப்படுகின்றது. படம் பார்க்கும் நாம் வழக்குடன் ஒன்ற முடியாமல், நீதிமன்றத்தில் உதயநிதி, பிரகாஷ்ராஜ், ராதாரவியின் நடிப்பை மட்டுமே ரசிக்கும் நிலை ஏற்படுகின்றது.
அதிலும் குறிப்பாக, நீதிமன்றக் காட்சிகளில், உதயநிதிக்கு வழங்கப்பட்டிருக்கும் வசனம், வழக்கின் மீது அல்லாமல், பிரகாஷ்ராஜை குறை கூறும் விதமாகவே அமைந்திருப்பது வழக்கின் மீது நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சுவாரசியத்தையும் நீர்த்துப் போகச் செய்கின்றது.
இதனிடையே, வழக்கின் முக்கியமான ஆதாரத்தை கான்ஸ்டபிள் மயில்சாமியிடமிருந்து சர்வ சாதாரணமாக காசு கொடுத்து வாங்குகிறார்கள் விவேக்கும், உதயநிதியும் அங்கேயே லாஜிக் இடிக்கிறது. அதை விட, வீட்டு வாடகையே கொடுக்க முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு எங்கிருந்து திடீரென லட்சக்கணக்கில் காசு வந்தது என்ற கேள்வியும் எழத் தான் செய்கின்றது.
என்றாலும், நீதி கிடைக்க வேண்டும் என்று தவிக்கும் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகள், மகளை இழந்து வாடும் நடிகர் சங்கிலி முருகன் உதயநிதிக்கு உதவுவது, நடந்த விபத்தை கண்ணீருடன் விளக்கும் பாதிக்கப்பட்டவர் என நெகிழ வைக்கும் காட்சிகளும் உள்ளன.
பிரகாஷ்ராஜ் கதாப்பாத்திரத்திற்கு ஆதிசேஷன் என்று பொருத்தமான பெயர் வைத்து, சாதாரண எலி போல் உள்ளே நுழையும் உதயநிதி அவரை வெல்வது போன்ற வடிவமைப்பு அழகு. பிரகாஷ்ராஜுக்கு எலியைப் பரிசாக அனுப்பி வைப்பது போல் காட்சிகள் வைத்து அதை சூட்சகமாக உணர்த்தியிருப்பதும் அருமை.
“காக்கிச் சட்டையே இப்படி செய்யும் போது, சட்டையே இல்லாதவன் எப்படி சார் சாட்சி சொல்ல வருவான்?”, “தெரியாத விசயத்தில் உங்க அறிவைப் பயன்படுத்தாதீங்க”, “பிளாட்பாரத்தில் தூங்குறது தப்புன்னா .. அதில கார் ஓட்டுறது மட்டும் ரைட்டா?” போன்ற சட்டென மனதில் நிற்கும் வசனங்களும் உள்ளன.
இந்தக் கதையைப் பொறுத்தவரையில், இந்தியாவில் நடந்த ஒரு பிரபலமான வழக்கைப் பிரதிபலிக்கின்றது. அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ‘பிரபலகத்திற்கு’ என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்.
அதன் காரணமாகவோ என்னவோ, இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், வழங்கப்படும் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு போல் இல்லாமல், உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் படியாக அமைத்திருப்பது நிஜ வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் எதார்த்தமாக இருக்கின்றது.
ஒளிப்பதிவு, இசை
ஆர்.மதி ஒளிப்பதிவில் நீதிமன்ற காட்சிகள், குடிசைப் பகுதிகள் ஆகியவை மிக அழகாகப் பதிவாகியுள்ளன.
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்திக் காட்டுகின்றன.
மொத்தத்தில், ‘மனிதன்’ – சமூக அக்கறையுள்ள கதை – உதயநிதி, பிரகாஷ்ராஜ், ராதாரவியின் நடிப்பை ரசிக்கலாம்!
-ஃபீனிக்ஸ்தாசன்