கோலாலம்பூர் – திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானே தொடர்ந்து பதவி வகிப்பார் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று திரெங்கானு சுல்தான் மிசான் சானால் அபிடினைச் சந்தித்துப் பேசியதாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானே தொடர்ந்து மந்திரி பெசாராக பதவி வகிக்கட்டும் என முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இனி இந்த விவகாரம் தொடர்பாக கேள்விகளோ அல்லது வதந்திகளோ (அகமட் ராசிஃப் பற்றி) வராது என நம்புகின்றேன். இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக நான் கருதுகின்றேன்” என்று புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற 2016 தேசிய உழைப்பாளர் தினக் கொண்டாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் நஜிப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அகமட் ராசிஃபின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நஜிப், “அது சுல்தானின் முடிவு. அதில் நான் தலையிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.