Home Featured நாடு “என் மகனைத் தூக்கிலிட வேண்டாம்” – சிங்கப்பூரின் கருணையை எதிர்பார்க்கும் சரவாக் குடும்பம்!

“என் மகனைத் தூக்கிலிட வேண்டாம்” – சிங்கப்பூரின் கருணையை எதிர்பார்க்கும் சரவாக் குடும்பம்!

663
0
SHARE
Ad

jabu.transformed_0கூச்சிங் – சிங்கப்பூரில் கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, எந்நேரமும் தூக்கிலப்படலாம் என்ற நிலையில் இருக்கும் சரவாக்கைச் சேர்ந்த ஜேபிங் கோ என்பவருக்காக, அவரது குடும்பத்தினர் கருணை மனு ஒன்றை சிங்கப்பூர் அதிபர் டோனி டானிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு சரவாக்கைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பொன்று உதவி செய்து வருகின்றது.

“இரண்டாம் வாய்ப்பை எதிர்பார்த்து கடைசி முயற்சியாக, சிங்கப்பூர் அதிபருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்துள்ளோம். வழக்கமான கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டால், மூன்று மாதத்திற்குள் அதிபர் தனது முடிவைத் தெரிவித்துவிடுவார்” என்று அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான கிர்ஸ்டீன் ஹான் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எந்த நேரத்திலும் (தூக்கு தண்டனை) அது நிறைவேற்றப்படலாம் என்று தெரிகின்றது. இந்த விவகாரத்தில் சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்தேமின் உதவியை நாடுகின்றோம். சிங்கப்பூரிடம் அவர் முறையீடு செய்ய வேண்டும். குறைந்த தண்டனை வழங்கும் படி அவர் கேட்க வேண்டும். அவரைத் தூக்கிலிட வேண்டாம்” என்று தூக்கு தண்டனைக் கைதி ஜேபிங்கின் சகோதரி ஜூமாய் கோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜேபிங்கின் தாயார் லெண்டுக் தனது மகன் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

“எனக்கு இருப்பது ஒரே மகன் தான். அவனைத் தூக்கிலிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என்று லெண்டுக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு, கா ருயின் என்ற சீனக் குடிமகனைக் கொலை செய்த குற்றத்திற்காக, கடந்த 2011-ம் தேதி, மே மாதம் சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இதனிடையே, கடந்த 2012-ம் ஆண்டு, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு சட்டப்பிரிவு 300 (c)-ன் கீழ் பிரம்படியுடன் கூடிய வாழ்நாள் சிறை விதிக்கும்படி சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதனையடுத்து, கடந்த 2013, நவம்பர் 18-ம் தேதி, நீதிபதி தாய் யோங் வாங், ஜேபிங் கோவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

என்றாலும், கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஜேபிங் கோவிற்கு மீண்டும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2015, நவம்பர் மாதம் கோவின் வழக்கறிஞர் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, அந்தத் தடை நீக்கிக் கொள்ளப்பட்டதால், எந்நேரமும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.