சென்னை – தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று பட்டுக்கோட்டை பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். ஊழலின் ஊற்றுக்கண்களாக திமுகவும், அதிமுகவும் இருந்து வருகின்றன.
தமிழகத்தின் அனைத்து வளங்களையும் இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு சுரண்டி விட்டன. அதிமுக ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது.
பால்கொள்முதலில் கூட ஊழல் செய்துள்ளது. மேலும் அதிமுக தலைமை ஊழலில் சிறை சென்று வந்துள்ளது. தமிழகத்தில் வெள்ளம் பாதித்தபோது பிரதமர் நேரில் பார்வையிட்டு 2 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்தார்.
ஆனால் அவைகள் அம்மா பெயரில் விநியோகம் செய்யப்பட்டது. இதுதவிர, ஊழலின் மற உருவமான காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்து தமிழகத்தை அறவே அழிக்க நினைக்கிறது. இது நடக்காது.
2ஜி, ஏர்செல் போன்ற ஊழல்களில் திளைத்தவர்களால், ஊழலை ஒழிக்க முடியாது. நல்லாட்சி தர முடியாது. ஆனால், மோடியின் 2 ஆண்டு ஆட்சியில் ஊழல் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் பெருக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியில் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஊழலை ஒழித்து, நல்ல திறமையான நல்லாட்சி மலர வாக்காளர்களாகிய நீங்கள் தாமரைக்கு வாக்களித்து மாநிலத்தில் மக்களாட்சி நடைபெற வாய்ப்பளிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை பிரச்சாரப் கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.