வாஷிங்டன் – அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் ‘அமெரிக்கத் தலைநகரில் தமிழ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
‘குளோபல் டெலிவிஷன்’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக இத்தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது. மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை இணைச்செயலராகப் பணியாற்றி, தற்போது அம்மாநில போக்குவரத்துத் துறை ஆணையராகப் பதவி வகிக்கும் டாக்டர் ராஜன் நடராஜன் இத்தொலைக்காட்சியைத் துவங்கி வைத்தார்.
வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் கோபிநாத், டாக்டர். ராஜன் நடராஜனுக்கு நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி, “அமெரிக்காவிலேயே ஒரு மாநில அரசின் அத்தகைய உயர் பதவி வகித்த முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர்”, என்று கூறினார்.
பின்பு அவரின் கேள்விகளுக்குப் பதிலளித்து, டாக்டர் ராஜன் நடராஜன் பேசியதாவது: “அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பத்து வருடங்களுக்கு முன்பு சுமார் 1.3 லட்சமாக இருந்தது, இப்போது 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
வாஷிங்டனில் மட்டும் சுமார் 10,000 தமிழர்கள் வசிப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இவ்வாறு அமெரிக்காவில் அதிக அளவில் தமிழர்கள் வசித்தாலும், அவர்களுக்கென ஒரு தமிழ்த் தொலைக்காட்சி இது வரையில் இல்லை. ஆகவே முதன் முறையாக அமெரிக்காவில் இத் தமிழ்த் தொலைக்காட்சியைத் துவங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதனால் இங்கு வாழும் தமிழர்களின் முக்கிய ஊடகமாக இத்தொலைக்காட்சி திகழும். அது மட்டுமல்லாமல், இங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும், ஒரு ஊடகப் பாலமாகவும் இத்தொலைக்காட்சி செயல்படும்”, என்றார்.