‘குளோபல் டெலிவிஷன்’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக இத்தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது. மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை இணைச்செயலராகப் பணியாற்றி, தற்போது அம்மாநில போக்குவரத்துத் துறை ஆணையராகப் பதவி வகிக்கும் டாக்டர் ராஜன் நடராஜன் இத்தொலைக்காட்சியைத் துவங்கி வைத்தார்.
வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் கோபிநாத், டாக்டர். ராஜன் நடராஜனுக்கு நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி, “அமெரிக்காவிலேயே ஒரு மாநில அரசின் அத்தகைய உயர் பதவி வகித்த முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர்”, என்று கூறினார்.
பின்பு அவரின் கேள்விகளுக்குப் பதிலளித்து, டாக்டர் ராஜன் நடராஜன் பேசியதாவது: “அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பத்து வருடங்களுக்கு முன்பு சுமார் 1.3 லட்சமாக இருந்தது, இப்போது 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதனால் இங்கு வாழும் தமிழர்களின் முக்கிய ஊடகமாக இத்தொலைக்காட்சி திகழும். அது மட்டுமல்லாமல், இங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும், ஒரு ஊடகப் பாலமாகவும் இத்தொலைக்காட்சி செயல்படும்”, என்றார்.