கோலாலம்பூர் – கடைசிக் கட்ட கோரிக்கையும் சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிக்கப்படவே, மலேசியரான கோ ஜேபிங்கிற்கு நாளை வெள்ளிக்கிழமை அந்நாட்டில் மரண தண்டனை வழங்கப்படவுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு, கா ருயின் என்ற சீனக் குடிமகனைக் கொலை செய்த குற்றத்திற்காக, கடந்த 2011-ம் ஆண்டு, மே மாதம் சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இதனிடையே, கடந்த 2012-ம் ஆண்டு, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு சட்டப்பிரிவு 300 (c)-ன் கீழ் பிரம்படியுடன் கூடிய வாழ்நாள் சிறை விதிக்கும்படி சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதனையடுத்து, கடந்த 2013, நவம்பர் 18-ம் தேதி, நீதிபதி தாய் யோங் வாங், ஜேபிங் கோவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
என்றாலும், கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஜேபிங் கோவிற்கு மீண்டும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2015, நவம்பர் மாதம் கோவின் வழக்கறிஞர் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, அந்தத் தடை நீக்கிக் கொள்ளப்பட்டதால், கோ ஜேபிங்கிற்கு மரண தண்டனை உறுதியானது.
இதனிடையே, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நேற்று புதன்கிழமை ஜேபிங்கின் தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதாவது, இந்த வழக்கில் இரண்டு மேல் முறையீட்டு மனு விசாரணைகளிலும், நீதிபதி அண்ட்ரியூ பாங்கே விசாரணை செய்வதாக ஜேபிங்கின் வழக்கறிஞர் கினோ ஹார்டியால் சிங் மனுத் தாக்கல் செய்தார்.
எனினும், அவரது கடைசிக்கட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டு நாளை மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.