திருவனந்தபுரம் – கேரளாவில் மே 16இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இடது சாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பினராய் விஜயன் (படம்) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சமன்ற உறுப்பினராவார்.
140 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 19 தொகுதிகளையும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 58 தொகுதிகளையும் வென்றுள்ளது.
72 வயதான பினராய் விஜயன் பல முறை கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதோடு, ஏற்கனவே, கேரள மாநில அரசில் அமைச்சராக இருந்திருக்கின்றார்.
மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை மட்டுமே பெற்று பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனது பதவி விலகல் கடிதத்தை, மாநில ஆளுநர் சதாசிவத்தை நேரடியாகச் சந்தித்து சமர்ப்பித்தார்.
மற்ற கட்சிகள் எஞ்சிய தொகுதிகளைப் பிரித்துக் கொண்டுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி முதன் முறையாக ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்று கேரளாவில் தனது அரசியல் காலடியைப் பதித்துள்ளது. இருப்பினும் அரசியல் ரீதியாக பாஜகவிற்கு இது பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது. காரணம், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ள அதே வேளையில், கேரளாவில் பல தொகுதிகளில் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.
பாஜக ஏறத்தாழ 10 சதவீத வாக்குகளையும், அதனுடன் இணைந்த கூட்டணிக் கட்சியான பிடிஜேஎஸ் ஏறத்தாழ 5 சதவீத வாக்குகளையும் பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி சுமார் 15 சதவீத வாக்குகளை கேரளா சட்டமன்றத் தேர்தலில் பெற்றிருக்கின்றன. இந்த வாக்குகள் காங்கிரஸ் கட்சி சார்பு வாக்குகள் என்றும் இந்த வாக்குகளை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜக கூட்டணி பிரித்தெடுத்த காரணத்தால்தான், இடது சாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற முடிந்தது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
-செல்லியல் தொகுப்பு