Home Featured கலையுலகம் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதாக வேந்தர் மூவிஸ் மதன் ரூ.52 லட்சம் மோசடி!

மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதாக வேந்தர் மூவிஸ் மதன் ரூ.52 லட்சம் மோசடி!

893
0
SHARE
Ad

mathan,சென்னை – மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் ரூ.52 லட்சம் மோசடி செய்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் பல திரைப்படங்களைத் தயாரித் துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் “வேந்தர் மூவிஸ் மதன், தான் காசியில் கங்கையில் சமாதி அடைவதாக கூறி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்” என்ற தகவல் பரவி வருகிறது.

கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்ற மதன் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ரா.வெங்கடேசன்(52) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

#TamilSchoolmychoice

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகன் ஆகாஷ் சிவனை, காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்காக திருச்சியை சேர்ந்த மூர்த்தி, நீலகண்டன், முத்தமிழ் ஆகியோர் மூலம் கடந்த 27-02-2016 அன்று வேந்தர் மூவிஸ் மதனை சந்தித்தேன். மருத்துவ சீட் வாங்கித்தர மதன் ரூ.62 லட்சம் கேட்டார்.

அவரிடம் நான் ரூ.52 லட்சம் கொடுத்தேன். பின்னர் 11-03-2016 அன்று ரூ.10 லட்சம் கொடுத்தேன். இந்நிலையில் எனது மகன் பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மதனை தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன்.

அதற்கு அவர், வடபழனி அலுவலகத்துக்கு சென்று தனது தம்பி சுதிரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். 23-05-2016 அன்று வடபழனி அலுவலகத்துக்கு சென்று சுதிரை சந்தித்தபோது, அவர் ரூ.10 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தார்.

இதுபற்றி மதனிடம் கேட்டபோது 30-ஆம் தேதி வந்து மீதிப்பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அதன்படி நான் சென்னை வந்து மதனை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்பேசியை அனைத்து வைத்திருந்தார்.

மருத்துவ கல்லூரிக்கு சென்று கேட்டபோது, பொறுமையாக இருங்கள் பணத்தை திருப்பி கொடுக்கிறோம் என்று கூறுகின்றனர். அங்கு என்னைப்போல பலர் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்து வந்திருந்தனர்.

எனவே வேந்தர் மூவிஸ் மதன் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதனின் தாயார் தங்கம், மனைவி சுமலதா ஆகியோர் நேற்று மாலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர்.

காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பேசி, மதனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் அது தொடர்பான புகார் மனுவை துணை ஆணையர் ஜெயக்குமாரிடம் கொடுத்தனர்.