நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் ஒரு புறம் இருக்க, கவர்ச்சிகரமாக அங்கே அமர்ந்திருக்கும் அரவிந்த் சுவாமியைக் காணவும் அதிகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
முறுக்கு மீசையும், பளபளக்கும் கன்னமுமாக திரையில் அவ்வளவு அழகாகத் தெரிகிறார் அரவிந்த் சுவாமி.
பல வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2013-ல் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கிய போது, அவரது தோற்றம் சற்று வயதாகத் தான் தெரிந்தது.
ஆனால், ரசிகர்கள் இன்னும் தன் மீதான ரசனையை மாற்றிக் கொள்வதில்லை என்பதை அப்படத்தின் மூலமாக உணர்ந்த அரவிந்த், கடுமையான உடற்பயிற்சிகள், உணவு முறைகள் மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டு ‘தனிஒருவன்’ திரைப்படத்தில் இன்னும் சற்று மெருகேறிய தோற்றத்தைக் காட்டினார்.
அப்படத்தின் மாபெரும் வெற்றியும், அவரது கதாப்பாத்திரத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பும் அரவிந்த் சுவாமிக்கு இன்னும் ஊக்கமாக அமைந்துவிட்டது.
இன்று விஜய் தொலைக்காட்சியில், அவரது தோற்றத்தைப் பார்க்கும் போது, ஆச்சர்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது.
இதற்கு முன்பு நடிகர் பிரகாஷ்ராஜ் இந்நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த போது, அரவிந்த் சுவாமி அதில் பங்கேற்றார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில், அழகும், இளமையும் கூடி இப்போது அந்நிகழ்ச்சியை அவரே நடத்திக் கொண்டிருப்பது அவரது தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் சான்றாக உள்ளது.
இதனிடையே, அழகு குறித்து அரவிந்த் சுவாமி ஆனந்தவிகடன் வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்று நினைவுக்கு வருகின்றது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“ஒரு விபத்து. தண்டுவடத்தில் அடி. ஒரு வருஷம் படுத்த படுக்கை. அதில் இருந்து மீள நாலு வருஷங்கள் ஆச்சு. படுக்கையில் இருந்து எழக்கூட முடியாத சூழல். கடுமையான வலி. ஒரு கால் வேற வராமல்போயிடுச்சு. அந்த சமயத்தில் நண்பர் பிஜு, ‘ஆயுர்வேத சிகிச்சை முயற்சி பண்ணு’னு சொன்னார்.”
“மூணு மாச சிகிச்சையில் மொத்த வலியில் இருந்தும் விடுதலை. ஆனா, அதுக்கு முன் ஏகப்பட்ட மாத்திரைகள் எடுத்துக்கிட்டதால முடி உதிர்ந்து, உடல் எடை கூடி… நான் நானாக இல்லை. 110 கிலோ எடை இருந்தேன். அந்தச் சமயத்துலதான் மணி சார் கூப்பிட்டார். ‘படம் பேர் ‘கடல்’. நீதான் இந்த கேரக்டர் பண்ற. உனக்கு ரெண்டு மாசம் டைம்… வா’னு கூப்பிட்டார். திரும்ப எக்சர்சைஸ்னு ஆரம்பிச்சு, வலி வந்துடுமோனு பயம். ஆனா, அவரின் ஊக்கத்தால் ரெண்டு மாசத்துல 15 கிலோ குறைச்சேன். ‘கடல்’ படம், என் வாழ்க்கையை மாத்திப்போட்ட ஒரு அனுபவம்.” என்று தெரிவித்துள்ளார்.
“என்னடா இது .. நம்ம நடிப்பைப் பற்றி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்களே’னு அப்போ வருத்தமா இருக்கும். ‘அழகு’னு பாராட்டினப்பவும் நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. விபத்துக்குப் பிறகு என் போட்டோக்களை ஷேர் பண்ணி, ‘எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான் பாருய்யா?’னு சொன்ன போதும் அதைப் பத்தி கவலைப்படலை. அழகை ஒரு காம்ப்ளிமென்டா நான் நினைச்சதே இல்லை. ஏன்னா, அதில் என் உழைப்போ, திறமையோ எதுவும் இல்லையே!” என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் ஆஸ்ட்ரோவின் ஸ்டார் விஜய்- 224 – அலைவரிசையில் இந்த நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 9.00 மணிக்கு ஒளியேறுகின்றது.
– ஃபீனிக்ஸ்தாசன்