ஜார்ஜ் டவுன் – பினாங்கில் கடந்த வாரம் இந்து ஆலயம் ஒன்றில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை விடக் கூடுதலாக மற்றொரு ஆலயம் ஒன்றில், நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகள் உடைத்து நாசம் செய்துள்ளனர்.
“சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு தான் பெனான்டியில் இது போன்ற சம்பவம் நடந்தது. இன்று இதற்கு முந்தைய சம்பவத்தை விடக் கூடுதலாக சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என்று ராமசாமி மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.
ஆலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளை நோக்கி மிகப் பெரிய கற்களை வீசி அவற்றை துண்டு துண்டாக்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனினும், சிலைகளைச் சேதப்படுத்தியவர்கள் உள்ளே இருப்பவர்களா அல்லது வெளியே இருப்பவர்களா என்பதை காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது முதல் காவல்துறை மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“சேதப்படுத்தப்பட்ட இரண்டு ஆலயங்களையும் நிர்வகிக்கும் குழு ஒன்று என்பதால் ஒரே வாரத்தில் இரண்டு ஆலயங்கள் சூரையாடப்பட்டுள்ளன. இதனை வைத்துப் பார்க்கும் போது குற்றவாளிகள் ஏதோ வலுவான தகவலைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். இது ஒரு தீவிரவாதத்தின் செயலா அல்லது பழிவாங்கலா?” என்று இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம், ஆரக்குடாவிலுள்ள பெனான்டி எஸ்டேட்டில் இருந்த முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்த சிலைகள் பல மர்ம நபர்களால் உடைத்து சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.