மாலே – கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரை முடித்து விட்டு மாலத்தீவு திரும்பிய அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமைக் கொலை செய்ய முயற்சி செய்த துணை அதிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28-ம் தேதி, ஹஜ் யாத்திரை முடித்துவிட்டு, விமானத்தில் தனது மனைவியுடன் டில்லி திரும்பிய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அங்கிருந்து அதிவேகப் படகும் மூலம் மாலத்தீவு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது. இதில் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குபின் நாடு திரும்பினார்.
இந்த நிகழ்ச்சி தற்செயலாக நடந்தது அல்ல என்றும் மாலத்தீவின் அந்நாள் துணை அதிபராக இருந்த அஹமத் அடீப் செய்த சதி என்றும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தலைநகர் மாலேவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் அஹமத் அடீப் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி முன்னாள் துணை அதிபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் இதே நீதிமன்றத்தில் அவருக்கு சமீபத்தில் பத்தாண்டு சிறை தண்டனை விதித்திருந்தது. சதி வழக்கு தண்டனையையும் சேர்த்து மொத்தம் 25 ஆண்டுகள் அஹமத் அடீப் சிறையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.