ஜோர்ஜ் டவுன் – இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ள பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆதரவாளர்கள் அவருக்கான தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஊழல் தடுப்பு ஆணையம் அமைந்துள்ள ஜாலான் சுல்தான் அகமட் ஷா சாலையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி இரவு முழுவதும் விழித்திருக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் லிம் குவான் எங்
குவான் எங்குடன் அவருக்கு பங்களாவை விற்ற பெண் வணிகரான பாங் லி கூன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லிம் குவான் எங் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருக்கின்றன என அவரது தந்தையும், ஜசெகவின் மூத்த தலைவருமான லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் பினாங்கு மாநில தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் லிம் குவான் எங்…
ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் 23வது பிரிவு, மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 165 ஆகிய சட்டங்களின் கீழ் குவான் எங் குற்றம் சாட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலாவது குற்றச்சாட்டு விவசாய நிலத்தை வணிக நிலமாக மாற்றியது தொடர்பில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டாகும்.
இரண்டாவது குற்றச்சாட்டு, சந்தை விலையை விட குறைந்த விலையில் ஒரு பங்களாவை வாங்கியது தொடர்பிலானதாகும்.
இதற்கிடையில், இது அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என ஜசெகவினர் குறை கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் பினாங்கு மாநிலத் தலைமையகம் முன் இன்று இரவு வந்து சேர்ந்த லிம் குவான் எங்கின் தந்தையும், ஜசெக தலைவருமான லிம் கிட் சியாங்…