சென்னை – சுவாதி கொலை வழக்கில் சிக்கியுள்ள செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் குறித்து எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“சுவாதியைக் கொன்றது ராம் குமார் என்ற பொறியியல் பட்டதாரி என செங்கோட்டை அருகே ஆடு மேய்த்து வந்த அவரை காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது பிளேடால் தன் கழுத்தை அறுக்க முயன்று அவசர சிகிச்சைப் பிரிவில் ராம்குமார் இருக்கிறார். கைது செய்யப்பட்டவர்தான் கொலையாளி எனில் தமிழகக் காவல்துறையினர் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள்.”
“கைது செய்யப்பட்டவர் பெயர் ராம்குமார் என்று இல்லாமல் பிலால் மாலிக் என்றோ அப்துல் காதர் என்றோ இருந்திருந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைக்கவே அச்சமாக உள்ளது. இணையத்தில் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி மதமோதல்களை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்தக் குற்றம் நடந்தாலும் இந்த சமூக விரோதிகள் உள்ளே வருவார்கள்.”
“காலையில் சற்றே மயக்கம் தெளிந்த ராம்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டு மறுபடி மயங்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். ராம்குமார் உயிருக்கு எந்த ஆபத்தும் நிகழக்கூடாது. அப்படி நிகழ்ந்தால் இந்த வழக்கின் உண்மைகள் உலகிற்குத் தெரியாமலே போய்விடும்.”
“ராம்குமாரை பின்தொடர்து கண்காணித்து பிடிக்க முயன்றபோது அவர் தற்கொலைக்கு முயல்வதற்கான அவகாசத்தை ஏன் அளித்தனர் என்று புரியவில்லை. இந்த நபர் ஒரு பயங்கரவாதியோ தொழில்முறை குற்றவாளியோ அல்ல. மேலும் அவரது கிராமத்தைச் சேர்ந்த பலரும் அவரது நடத்தை பற்றி நல்ல அபிப்ராயங்களையே கூறுகின்றனர், பொதுவாக ஸ்ப்லிட் பெர்சனாலிட்டிகள் அப்படி இருக்க வாய்ப்பு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டபோது மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது. எனவே கைது சம்பவத்தின்போது என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவரை சேதாரமில்லாமல் பிடிப்பதற்கான வாய்ப்புகள் காவல்துறைக்கு இருந்தன என்பதை மறுக்க முடியுமா?”
“சென்னைக்கு வந்து மூன்று மாதமே ஆன ஒருவர் அதற்குள் ஒரு பெண்ணை காதலிக்க முயன்று கொலை செய்யும் அளவுக்கு தயாராக முடியுமா என்பதை உளவியலாளர்கள்தான் விளக்க வேண்டும். மேலும் முதல்முதலாக ஒரு குற்றத்தைச் செய்யும் ஒருவர் தொழில்முறைக் குற்றவாளியைபோல அவ்வளவு துல்லியமாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்பதும் பெரும் ஆச்சரியம். அவர் பயன்படுத்திய ஆயுதம், கொலையை திட்டமிட்டதாகச் சொல்லப்படும் விதம், தப்பிச்சென்றவிதம் எதுவும் கணநேர ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்தவருடையதாக தெரியவில்லை. ராம்குமாருடன் இருந்த ஒரு நபர் பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அவர் ராம்குமாருக்கு உதவியாக இருந்தாரா அல்லது ராம் குமார் அவருக்கு உதவியாக இருந்தாரா என்று தெரியவில்லை.”
“ராம்குமார் உயிருடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு முறையாக விசாரிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமற்ற வகையில் அவர்தான் குற்றவாளி என்றால் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அதற்குமுன் அவிழ்க்கப்படவேண்டிய மர்மமுடிச்சுகள் பல இருக்கின்றன.” இவ்வாறு மனுஷ்ய புத்திரன் தெரிவித்துள்ளார்.