ஜெட்டா – சவுதி அரேபியாவின் மூன்று வெவ்வேறு நகர்களில் கடந்த 24 மணி நேரத்தில் அடுக்கடுக்கான மூன்று பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
முதல் இரண்டு தாக்குதல்களில் யாரும் பாதிப்படையவில்லை. ஆனால், சவுதி அரேபியாவின் இராணுவத்தையும், மேற்கத்திய நாடுகளின் நலன்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் சில நாட்களில் முஸ்லீம்களின் புனிதப் பெருநாளான நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் வேளையில் இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
முதலாவது தாக்குதல், செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கு முன்னதாக ஜெட்டாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் அருகில் நடத்தப்பட்டது. தற்கொலைத் தாக்குதல்காரன் தன்னைத் தானே வெடிகுண்டுகளால் வெடிக்கச் செய்து மரணமடைந்தான் எனினும் மற்றவர்கள் யாரும் கொல்லப்படவில்லை. சில போலீஸ்காரர்கள் மட்டும் காயமடைந்தனர்.
கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள குவாத்திஃப் (Qatif) என்ற நகரில் ஷியாட் பள்ளிவாசல் ஒன்றைக் குறிவைத்துத் தாக்கப்பட்ட தாக்குதலும் தோல்வியில் முடிந்தது. தற்கொலைத் தாக்குதல்காரன் தனது வெடிகுண்டுகளால் உயிரிழந்தான் எனினும் மற்ற உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. யாரும் காயமடையவில்லை.
மெதினாவில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதோடு, ஒருவர் காயமடைந்தார். நபிகள் நாயகம் அவர்களின் சமாதி இங்கே உள்ளதால் இது முஸ்லீம்களின் புனித தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.
இந்தத் தாக்குதலிலும் தாக்குதல்காரன் கொல்லப்பட்டுள்ளான். ஆனால் மற்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதுவரை எந்தத் தரப்பும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.