
வாஷிங்டன் : உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரிகளும் ரஷிய அதிகாரிகளும் சவுதி அரேபியாவில் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
இதில் முக்கியத் திருப்பம் என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் யாரும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கு பெற மாட்டார்கள் என்பதுதான்!.
ஐரோப்பிய நாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நடதப்படும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் அமெரிக்க அதிபரின் பிரதிநிதிகளாக அடுத்த சில நாட்களில் ரஷிய அதிகாரிகளைச் சந்திக்க சவுதி அரேபியா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷிய சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும் அதிகாரத்துவம் வாய்ந்த உயர்நிலை அதிகாரிகளை புடின் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் புடினுடன் ஒருமணி நேரம் தொலைபேசி உரையாடல் நடத்தியதாக டொனால் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன் பின்னர் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வழி பேசியதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்தே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவில் நடைபெறவிருக்கிறது.