சிங்கப்பூர் – சிங்கப்பூருக்கு வருகை புரிபவர்களிடம் சோதனைச் சாவடியிலேயே, உளவியல் முறைப்படி சில கேள்விகளைக் கேட்டு அவர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கைகளுக்குத் தயாராகிறது அந்நாட்டு அரசு.
சிங்கப்பூருக்கு வருகை புரிபவர்களிடம் குடிநுழைவு அதிகாரிகள் இந்த உளவியல் ரீதியான கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவர்கள் பதிலளிக்கும் முறையை ஆராய்கிறார்கள். அதன் மூலம் அந்நபரின் நோக்கத்தைக் கண்டறிந்துவிட முடியும் என்று உளவியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பாதகச் செயல்களை விளவிக்கும் நோக்கத்துடன் வருபவர்களை முன்பே கண்டறிந்து, அவர்களைத் தடுப்பதே இந்த புதிய நடவடிக்கையின் நோக்கமாகும்.
சிங்கப்பூரைச் சேர்ந்த குணநலன் சார்ந்த அறிவியல் மையமும் (Behavioural Sciences Centre), பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கேள்விகளைத் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.