கோலாலம்பூர் – 1 எம்டிபி நிறுவனத்திலிருந்து திருடப்பட்ட 1 பில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலரை மீட்கும் நடவடிக்கையாக, அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கில், இதுவரை இல்லாத அளவுக்கு விரிவான தகவல்கள், விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு முக்கிய தகவல், ‘மலேசிய அதிகாரி 1″ என்ற ஒருவர் 1எம்டிபி விவகாரத்தில் பின்னணியில் செயல்பட்டார் என்பதாகும். இதைத் தொடர்ந்து அவர் யார் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்துள்ளது.
மலேசிய அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர் என்றால் அது பிரதமரைத்தான் குறிக்கும். ஆனால், அந்த வழக்கில் எங்கும் நஜிப்பின் பெயர் குறிப்பிடப்படவில்லை என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி தற்காத்துள்ளார்.
“அதற்குள் எல்லாவற்றையும் முடிவு செய்து விடாதீர்கள். பொறுத்திருங்கள்” என நஜிப்பும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜசெக தலைவரும், 1 எம்டிபி விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவருமான டோனி புவா (படம்) அந்த முதலாவது மலேசிய அதிகாரி நஜிப்தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அமெரிக்க வழக்கையும் அதில் காணப்படும் தகவல்களையும் மேற்கோள் காட்டி டோனி புவா விரிவான விளக்கங்களும் தந்துள்ளார்.