ஜாலான் கெந்திங் கிளாங் சாலையில் போக்குவரத்துக்கான சமிக்ஞை விளக்குகள் கொண்ட முச்சந்தியில், பிற்பகல் 3.30 மணியளவில், சிவப்பு விளக்கு காரணமாக, காரில் காத்திருந்த ஒரு நபரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.
மோட்டார் சைக்கிளில் காரைப் பின்தொடர்ந்து வந்த இருவர் கார் முன்பகுதியின் இருபுறமும் துப்பாக்கித் தாக்குதல் நடத்திவிட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றனர்.
குண்டர் கும்பல் தகராறுகள் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சுடப்பட்ட 43 வயதான நபர் பெயர் ‘கண்ணா’ என சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சுடப்பட்ட சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே அந்த காட்சிகள் காணொளியாக (வீடியோ) சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதுதான். அந்தக் காணொளியை எடுத்தவர்கள் விரல்கள் கூட காணொளியில் தெரிகின்றன. பின்னணியில் சில பேச்சுக் குரல்கள் மலாய் மொழியில் கேட்கின்றன.
முன்கூட்டியே திட்டமிட்டு இந்த காணொளி எடுக்கப்பட்டதா, அல்லது யதேச்சையாக, எதிர்பாராமல் எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஓர் உயரமான பகுதியில் இருந்து இந்த காணொளி எடுக்கப்பட்டிருக்கின்றது.
கொல்லப்பட்டவரின் பின்புலம்
இதற்கிடையில் கொல்லப்பட்டவரின் பின்புலம் குறித்து காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். குண்டர் கும்பல் மோதல்கள் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.