சென்னை – கடந்த ஜூலை 22-ம் தேதி, சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 வீரர்களுடன் சென்ற இந்திய விமானப் படை விமானம் ஏஎன்32 நடுவானில் மாயமானது.
இந்நிலையில், கடந்த 11 நாட்களாக கடலுக்கடியில் விமானத்தைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எனினும் இதுவரை விமானம் இருக்கும் பகுதியைக் கண்டறியமுடியவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனிடையே, ஆந்திர மாநில வனப்பகுதியில், விமானம் போன்றதொரு பொருள் ஒன்று வெடித்து விழுந்ததாக, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அளித்த தகவலின் படி, வனப்பகுதியிலும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து ஆந்திர வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் , “ஆந்திர வனப்பகுதியிலும் விமானத்தைத் தீவிரமாக தேடி வருகிறோம். பழங்குடியினர் கூறும் பகுதி சட்டீஸ்கார் மற்றும் ஒடிசா மாநில எல்லையையொட்டிய விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியாகும். அது மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ள பகுதி. இங்கு கடந்த சில நாட்களாக மோசமான பருவநிலை காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பெரிய அளவில் எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து விமானத்தை தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.