கோலாலம்பூர் – மலேசியப் பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நிறுவன சகா ரால்ப் மார்ஷல் ஆகிய இருவருக்கும் எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை பிறப்பித்தால் அது இங்கு செல்லுபடியாகாது என்றும் அதனை அடிப்படையாக வைத்து ஆனந்த கிருஷ்ணனைக் கைது செய்ய முடியாது என்றும் மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் விடுக்கும் கைது ஆணைகளைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் எதுவும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இல்லை என்பதால், அப்படியே இந்திய அரசாங்கம் கைது ஆணை பிறப்பித்தாலும், ஆனந்த கிருஷ்ணனை மலேசியக் காவல் துறை கைது செய்யாது என்றும் காலிட் அறிவித்துள்ளார்.
ஆனந்த கிருஷ்ணனையும், மார்ஷலையும் பண இருட்டடிப்பு சட்டங்களின் கீழ் விசாரிப்பதற்கு, இந்திய அமலாக்கப் பிரிவு இருவருக்கும் முன் அறிவிப்பு கொடுத்துள்ளதாக இந்தியத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதைத் தவிர, மேக்சிஸ், அஸ்ட்ரோ, சன் டைரக்ட் டிவி, ஆசிய எண்டர்டெய்ண்மென்ட் ஆகிய நிறுவனங்களுக்கும் எதிராகவும் விசாரணை ஆணையை அமலாக்கப் பிரிவு அனுப்பியுள்ளது.
தங்களின் வணிக நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது என மேக்சிஸ் நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.