வாஷிங்டன் – சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங் தற்போது அமெரிக்காவுக்கான அதிகாரபூர்வ வருகையை மேற்கொண்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் இன்று வெள்ளை மாளிகையில் வரவேற்பு அளித்து கௌரவித்தார்.
அப்போது, லீ சியன் லுங்கை வரவேற்று உரையாற்றிய ஒபாமா, சிங்கப்பூரில் நான்கு மொழிகள் அதிகாரபூர்வ மொழிகளாக இருக்கின்றன, எனவே அந்த நான்கு மொழிகளிலும் அவருக்கு வரவேற்பு கூறுகின்றேன் என்று கூறினார்.
அதன்பின்னர், “செலாமாட் டத்தாங்” என மலாய் மொழியிலும், “வணக்கம்” என தமிழிலும், ‘நீ ஹௌ’ என சீன மொழியிலும் ஒபாமா வரவேற்பு கூறினார்.
லீயின் வெள்ளை மாளிகை வருகையும், ஒபாமாவின் வரவேற்பு உரையும் முகநூல் வழியாக நேரலைக் காணொளியாக இன்று ஒளிபரப்பப்பட்டது. முகநூல் தற்போது நேரலையாக நிகழ்ச்சிகளை காணொளியாக ஒளிபரப்பும் வசதிகளை முகநூல் பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
லீயின் வெள்ளை மாளிகை வருகை, ஒபாமா தமிழில் வணக்கம் கூறும் காட்சியையும், கீழ்க்காணும் முகநூல் இணைப்பில் காணொளியாகக் காணலாம். இந்த காணொளியை சிங்கை பிரதமர் லீ சியன் லுங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.facebook.com/leehsienloong
அநேகமாக, அமெரிக்க அதிபர் ஒபாமா மேடையில் உதிர்த்த முதல் தமிழ் வார்த்தை இன்று அவர் சிங்கை பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கூறிய ‘வணக்கம்’ என்ற வரவேற்பு வார்த்தையாகத்தான் இருக்குமோ?