புதுடில்லி – நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வாரணாசி (காசி) நகரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக தனது பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு புதுடில்லி திரும்பினார்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில், பிரம்மாண்டமான கூட்டத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.
வாரணாசியில் சோனியா காந்திக்கு உற்சாக வரவேற்பு
பிரச்சாரக்கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வாரணாசி வந்த அவருக்கு அங்குள்ள விமான நிலையத்திலேயே மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.
பின்னர் புதுடில்லி திரும்பிய அவரோடு, விமானத்தில் சில மருத்துவர்களும் உடன் சென்றனர்.
புதுடில்லி விமான நிலையத்தில் அவரது மகன் ராகுலும், மகள் பிரியங்காவும் சோனியாவை அழைப்பதற்காக காத்திருந்தனர்.
பின்னர் புதுடில்லியிலுள்ள ஒரு மருத்துவமனையில் சோனியா காந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு களைப்பு காரணமாக லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்ப்பட்டிருந்தன.
உடனடியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சோனியா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுமென செய்தியொன்றை வெளியிட்டார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் உத்தரப் பிரதேசத்தில் வென்றால் அடுத்த முதல்வர் என பெயர் குறிப்பிடப்பட்டிருப்பவருமான ஷீலா தீக்ஷிட்டைத் தொடர்பு கொண்டு மோடி சோனியாவின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். சோனியா டில்லி திரும்ப உதவிக்கு ஒரு மருத்துவரையும், தனி விமானத்தையும் அனுப்புவதற்கும் மோடி முன்வந்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.