Home Featured கலையுலகம் “மற்ற இனங்களோடு போட்டியிட ஏன் அஞ்ச வேண்டும்?” – விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஒளிப்பதிவாளர்!

“மற்ற இனங்களோடு போட்டியிட ஏன் அஞ்ச வேண்டும்?” – விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஒளிப்பதிவாளர்!

867
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியப் படங்களை மொழி வாரியாகப் பிரித்து விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலேசியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான மொகமட் நூர் காசிம் இதற்கு முன்பு மலேசியத் திரைப்பட விழாக்களில் தான் பெற்ற இரண்டு விருதுகளை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திரும்ப ஒப்படைத்தார்.

வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள மலேசியத் திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான பிரிவில் போட்டியிட அதில் 70 சதவிகிதம் மலாய் மொழி வசனங்கள் இருக்க வேண்டும் என மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் (பிஎப்எம்) , தேசியத் திரைப்பட மேம்பாட்டு வாரியமும் (ஃபினாஸ்) இணைந்து எடுத்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் மொகமட்.

இந்நிலையில் நேற்று இரவு பிஎப்எம், ஃபினாஸ் ஆகியவை தங்களது முடிவு குறித்து அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த மொகமட் தான் பெற்ற விருதுகளைத் திரும்ப ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நான் இன்னும் அதிருப்தியில் தான் உள்ளேன். காரணம் நாம் மலேசியர்கள். ஏன் பிரிக்க வேண்டும்?”

“நான் மலாய் இனத்தைச் சேர்ந்தவன். ஆனால் மலாய்காரர்கள் மற்ற இனங்களோடு போட்டியிட அஞ்சினால், நான் மலாய் இனத்தைச் சேர்ந்தவன் என்பதில் வெட்கப்படுகின்றேன்”

“நாம் ஏன் ஆரோக்கியமான போட்டியைக் கண்டு அஞ்ச வேண்டும்? ஏன் சீனர்கள் மற்றும் இந்தியர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும்? திரைப்படங்களைப் பொறுத்தவரையில், அதன் மொழி எந்த வகையில் முக்கியம்” என்று 43 வயதான மொகமட் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஃபினாஸ் பொது இயக்குநர் டத்தோ கமீல் ஒத்மானிடம் தான் பெற்ற இரண்டு விருதுகளை அவர் திரும்ப ஒப்படைத்துள்ளார்.