Home Breaking News முக்கிய முடிவெடுக்க பழனிவேல் தரப்பினர் இரகசிய ஆலோசனைக் கூட்டம்!

முக்கிய முடிவெடுக்க பழனிவேல் தரப்பினர் இரகசிய ஆலோசனைக் கூட்டம்!

978
0
SHARE
Ad

Palanivel -Sothinathan-Balakrishan

கோலாலம்பூர் – சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினர் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் பழனிவேல் தரப்பின் முக்கியத் தலைவர்கள் 10 பேர் கலந்து கொள்வார்கள் என்றும் டத்தோ எஸ்.சோதிநாதன், ஜோகூர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிகிறது.

#TamilSchoolmychoice

மஇகாவுக்கு வெளியில் நிற்கும் எஞ்சியுள்ள மஇகா கிளைகள் கட்சிக்குள் திரும்புவதற்கு மற்றொரு வாய்ப்பு வழங்குவதாக, புதன்கிழமை 17 ஆகஸ்ட் 2016இல் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மஇகாவின் இந்த அறிவிப்பு தொடர்பாக விவாதிக்கவும், முடிவெடுக்கவும்தான் இன்றைய கூட்டம் கூட்டப்படுவதாக பழனிவேல் தரப்பில் தீவிரமாக இயங்கி வரும் தலைவர் ஒருவர் செல்லியலிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவின் அழைப்பை நாங்கள் நிராகரிக்கிறோம் என பழனிவேல் தரப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் கூறியதாக இன்றைய தமிழ் நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Datuk S Balakrishnanடாக்டர் சுப்ராவுடன் இணைந்து செயலாற்ற பழனிவேல் தரப்பினர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், ஏற்கனவே சுப்ரா இதே போன்ற அழைப்பை தங்கள் தரப்புக்கு விடுத்து வந்திருப்பதாகவும் பாலகிருஷ்ணன் (படம்) மேலும் கூறியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் இரகசியக் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் பாலகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.

இன்றைய கூட்டம் முடிவு பெற்ற பின்னரே, பழனிவேல் தரப்பினரின் இறுதி முடிவு என்ன என்பது குறித்த ஓரளவுக்கு தெளிவான நிலைமை தெரியவரும் என கருத்து தெரிவித்துள்ள, பழனிவேல் தரப்பு வட்டாரங்கள், தற்போது பழனிவேல் தரப்பு, எந்த முடிவு எடுப்பது என்பது குறித்து பிளவுபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு சாரார், மீண்டும் கட்சிக்குத் திரும்புவதுதான் சரியான அரசியல் தீர்வு என்றும், அதன் பின்னர் கட்சிக்குள் இருந்துதான் நமது போராட்டம் தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றனர். டத்தோ சோதிநாதனும் இதையேதான் வலியுறுத்தி வருகின்றார் என்றும் பழனிவேல் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மற்றொரு தரப்பினர் மஇகாவில் சேருவதை விட தனித்து இயங்க வேண்டும், புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இத்தகைய இருவிதமாக கருத்து மோதல்களால்தான் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய கூட்டம் இந்த கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், பிளவுகள் மேலும் விரிவாக வளர்வதற்கும்  அறிகுறிகள் தென்படுவதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன.

பழனிவேல் தரப்பிலேயே ஒரு குழுவினர், சோதிநாதன் சோரம் போய்விட்டார் என்றும், சொந்த நலனுக்காகவும், பதவிகளுக்காகவும் சுப்ராவுடன் இணைகிறார் என்றும் பிரச்சாரத்தைத் தொடக்கியுள்ளதால் சோதிநாதனும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாகவும், அதன் காரணமாக, இன்றையக் கூட்டத்தில் கருத்து மோதல்கள் வெடிக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.