Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: தர்மதுரை – காதலோடு, சமூகப் பிரச்சினைகளைப் பேசும் அருமையான கிராமத்துக் கதை!

திரைவிமர்சனம்: தர்மதுரை – காதலோடு, சமூகப் பிரச்சினைகளைப் பேசும் அருமையான கிராமத்துக் கதை!

1242
0
SHARE
Ad

dharmaduraiகோலாலம்பூர் – மிக எதார்த்தமான கதை.. காதல், உறவுகளுக்குள்ளான சண்டைச் சச்சரவுகள், சமூகப் பிரச்சினைகள், மருத்துவத் தொழிலின் மகிமை எனப் பல விவகாரங்களை மிக எளிமையான கதையோட்டத்தில், கிராமத்து மண் வாசனையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சீனு இராமசாமி.

கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து, நகரம் போய் மருத்துவம் படித்து, அங்கு மருத்துவச் சேவையின் மகிமையை உணர்ந்து, தனது சொந்த கிராம வட்டாரத்திலேயே ஏழைகளுக்காக மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் தர்மதுரை (விஜய்சேதுபதி), காலச்சூழ்நிலையாலும், தனது உடன்பிறப்புகளின் சூழ்ச்சியாலும் ஒரு பெரும் துயரத்தைச் சந்திக்கிறார்.

அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவர், குடிக்கு அடிமையாகிறார். நாளுக்கு நாள் இவரின் தொந்தரவு அதிகமாகிக் கொண்டே போக, அண்ணன் தம்பிகள் அவரை ஏதாவது செய்து விடலாம் என்ற ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

அவர்களின் சூழ்ச்சியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? குடியிலிருந்து எப்படி மீள்கிறார்? என்பதே படத்தின் சுவாரசியங்கள்.

நடிப்பு

w2-19-1471591074‘தர்மதுரை’ கதாப்பாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. அவரின் இயல்பான நடிப்பும், அப்பாவித்தனமான முகபாவனைகளும் அக்கதாபாத்திரத்திற்குச் சரியாகப் பொருந்தி காட்சிக் காட்சி வசீகரிக்கிறது.

அதிலும் ஐஸ்வர்யா ராஜேசுடனான காதல் காட்சிகளில் அவ்வளவு உயிரோட்டம். அதற்கு ஏற்ப ஐஸ்வர்யா ராஜேசும் அற்புதமான நடித்திருக்கிறார்.

கிராமப் பெண்ணைப் போல் அச்சு அசலாக தனது தோற்றத்திலும், உடல்மொழியிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். நிச்சயமாக அந்தக் கதாப்பாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரும் அவ்வளவு சிறப்பாகச் நடித்திருக்க முடியாது என்றே சொல்லலாம்.

அடுத்ததாக, நடிகை ராதிகா.. தர்மதுரை மீதான அன்பையும், பாசத்தையும் மனதில் சுமந்து கொண்டு, தனது மற்ற பிள்ளைகளின் அதிகாரத்தையும் மீற முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு நம்மை கலங்க வைக்கிறது. “ஏண்டா.. அன்னைக்கு அத்தனை பேர் சேர்ந்து அடிச்சாய்ங்களே.. திரும்ப எதாச்சும் செஞ்சானா? என் பேச்சைக் கேட்டு ஊர் எல்லையில போய் நின்னிடுச்சி என் குட்டி யானை” இப்படியாக படத்தில் கிராமத்துத் தாயாக மகனை நினைத்து உருகும் பல காட்சிகள் ராதிகாவிற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

maxresdefaultதொடங்கியது முதல் ஒருவித இறுக்கத்துடனேயே போகும் திரைப்படத்தில், சற்றே இளைப்பாற தமன்னாவும், ஸ்ருஷ்டியும் வருகிறார்கள். கல்லூரி காட்சிகளில் விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி கூட்டணியின் நட்பும், அன்பும் அவ்வளவு இனிமை.

கல்லூரி பேராசிரியராக டாக்டர் காமராஜ் கதாப்பாத்திரத்தில் நடிகர் ராஜேஸ் மனதில் நின்றுவிடுகிறார். கிராமப்புறத்தில் இருந்து தான் படித்து டாக்டரான கதையும், முனியாண்டி என்ற பெயரை காமராஜ் என தான் மாற்றிக் கொண்டதற்காக அவர் சொல்லும் காரணமும் நெகிழ வைக்கிறது.

இவர்கள் தவிர, கஞ்சா கருப்பு, அருள் தாஸ், எம்.எஸ்.பாஸ்கர், ஒய்ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி எனப் பலர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

திரைக்கதை 

தொடங்கியது முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திச் சென்ற விதம் மிகவும் ரசிக்க வைத்தது.

விஜய்சேதுபதி ஏன் அப்படி நடந்து கொள்கிறார்? என்ன தான் பிரச்சினை அண்ணன் தம்பிக்குள்? என்று படம் பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டு வகையில், முதல் பிளாஷ்பேக்கில் விஜய்சேதுபதியின் கல்லூரி காலங்களின் வழி அவரது உண்மையான குணாதிசியங்களையும், இரண்டாவது பிளாஷ்பேக்கின் வழி அவர் தடம் மாறிப் போன காரணத்தையும் சொன்ன விதம் இயக்குநரின் திறமைக்கான சான்று.

Dharma-Durai-Teaser1கிராமப்புறங்களில் ஏழைப் பெண்கள் ‘வரதட்சணை’ என்ற பெயரில் படும் துயரத்தை மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

அதேபோல், மருத்துவ மாணவர்களுக்கு, செகண்ட் இயர் சிண்ட்ரோம் (Second Year Syndrome) என்ற ஒரு பிரச்சினை ஏற்படுவது குறித்து ஒரு காட்சியின் வழி சொல்லியது புதுமை. ஒரு சிறு குறிப்பு தான் என்றாலும், சினிமா ரசிகர்களுக்கு அது ஒரு புதிய தகவல்.

“வலி நீக்குபவன் தான் உண்மையான கடவுள்.. நீங்க உங்க சேவையை சரியாகச் செய்து எத்தனையோ கிராமங்களில் வலியோடு போராடிக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்தீர்கள் என்றால் நீங்களும் கடவுள் தான்” இப்படியாக பல சமூக சார்ந்த விசயங்களையும், மக்களின் தேவைகளையும் வசனங்களின் வழி சொல்லிய விதம் சிறப்பு.

என்றாலும், கடைசியில் தமன்னாவுடனான காட்சிகள் தான் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றியது. தமன்னா திருமணம், விவாகரத்து போன்றவற்றைத் தவிர்த்து நேரடியாகவே சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஒளிப்பதிவு, இசை

dharma-durai-shooting-spot-stills_1454149958-bஎம்.சுகுமார் ஒளிப்பதிவில் கிராமப்புறங்களும், வயல்வெளிகளும் அவ்வளவு அழகு. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேசின் வீட்டைக் காட்டிய விதம் மிகவும் ரசிக்க வைத்தது.

யுவன்சங்கர் ராஜா இசையில், கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் பாடல்களில் கிராமத்து மண் வாசனை வீசுகிறது. ‘ஆண்டிப்பட்டி’, ‘போய் வாடா’ போன்ற பாடல்கள் மனதில் தங்கி விடுகின்றன.

மொத்தத்தில், தர்மதுரை – காதலோடு, சமூகப் பிரச்சினைகளையும் பேசும் அருமையான கிராமத்துக் கதை!

-ஃபீனிக்ஸ்தாசன்