புத்ரா ஜெயா – நாட்டின் தலைமை நீதிபதியான துன் அரிபின் ஜக்காரியா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரவுஸ் ஷரிப் மற்றும் மலாயாவுக்கான தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மகினுடின் ஆகியோரின் பதவிக் காலம் மாமன்னரால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளுக்கான ஓய்வு வயதை அடைந்துள்ள அவர்களின் பணிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு மாமன்னர் நீட்டித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 1-ஆம் தேதி 66 வயதை எட்டும் தலைமை நீதிபதி அரிபின் ஜக்காரியா தொடர்ந்து தான் ஆறு மாதங்களுக்கு பதவி வகிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரவுஸ் எதிர்வரும் பிப்ரவரியில் ஓய்வு பெற வேண்டியவராவார். மலாயாவுக்கான தலைமை நீதிபதி சுல்கிப்ளி மார்ச் மாதத்தில் ஓய்வு பெறவேண்டியவராவார்.
இதற்கிடையில், கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான ஜெப்ரி டான் கோக் ஹூவா அவரது அனுபவம் காரணமாக கூடுதல் நீதிபதியாக, இரண்டு ஆண்டுகள் தவணைக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இதுபோன்று பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீண்டும் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறையல்ல என்று கூறப்படுகின்றது. இதற்கு முன்பாக 1960-ஆம் ஆண்டுகளில்தான் ஒருமுறை ஓய்வு பெற்ற நீதிபதி மறுநியமனம் செய்யப்பட்ட முன்னுதாரணம் நிகழ்ந்திருக்கின்றது.