கோலாலம்பூர் – மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அவரது நிறுவனங்களின் துணைத் தலைவர் ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது இந்திய நீதிமன்றம் விதித்திருக்கும் கைது ஆணை, மீண்டும் மலேசியாவில் சட்ட சர்ச்சைகளைச் சந்தித்து வருகின்றது.
மேக்சிஸ் நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் தொலைக்காட்சி நிறுவனங்களின் அதிபர் கலாநிதி மாறன் (மாறன் சகோதரர்கள்) ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கில் ஆனந்த கிருஷ்ணனையும், ரால்ப் மார்ஷலையும் சேர்த்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னால் அந்த இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார்கள் என்று கூறி அவர்களுக்கு எதிராக கைது ஆணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
இந்த கைது ஆணை மலேசியாவில் செல்லுபடியாகுமா? அல்லது இந்திய அரசாங்கம் ஆனந்த கிருஷ்ணனைக் கைது செய்யும் ஆணையைப் பெற மலேசிய நீதிமன்றத்தில் தனியாக விண்ணப்பிக்குமா? அவ்வாறு செய்வதற்கு இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? என்பது போன்ற சட்டப் பிரச்சனைகளும், கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.
ஐஜிபியின் கருத்து
மலேசியாவின் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் எடுத்த எடுப்பில், இந்திய நீதிமன்றத்தின் கைது ஆணை மலேசியாவில் செல்லாது என்றும் அதை அடிப்படையாக வைத்து ஆனந்த கிருஷ்ணனைக் கைது செய்ய முடியாது என்றும் அறிவித்திருந்தார்.
ஆனால், நாட்டின் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவரான எஸ்.என்.நாயர் இந்திய நீதிமன்றத்தின் கைது ஆணையை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (அட்டர்னி ஜெனரல்) அங்கீகரித்து விட்டால் அதன் பின்னர் அதைக் கொண்டு ஆனந்த கிருஷ்ணனைக் கைது செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார். நாயரின் கருத்துகளை ஃபிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளம் வெளியிட்டிருக்கின்றது.
நாயர் (படம்), ஒரு முன்னாள் காவல் துறை அதிகாரி என்பதோடு, அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதித்து பல வழக்குகளில் வாதாடியவர்.
“ஐஜிபி முறையாக விசாரிக்காமல் முந்திக் கொண்டு பதிலளித்துள்ளார். வழக்கமாக மற்றொரு நாட்டின் கைது ஆணை – அதாவது இந்திய அரசாங்கத்தின் கைது ஆணை – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும்போது, அதனுடன் அந்த நபரைக் கைது செய்து நாடு கடத்தி, இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் விண்ணப்பத்தையும் இந்திய அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் நாடு கடத்தப்படலாம்” என்பதுதான் வழக்கறிஞர் நாயரின் வாதம்.
அதே சமயத்தில் அந்த விண்ணப்பத்தை எதிர்த்து கைது ஆணை பிறப்பிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்வழக்காடலாம் என்றும் நாயர் கூறியுள்ளார்.
கைது ஆணையை மட்டும் வைத்து ஆனந்தகிருஷ்ணனையும், மார்ஷலையும் கைது செய்ய முடியாது என்றும் நாடு கடத்தும் விண்ணப்பத்தை அடிப்படையாக வைத்துத்தான் கைது செய்ய முடியும் என்றும் ஐஜிபி கூறியிருந்ததை மறுத்திருக்கும் நாயர், “முதலில் கைது ஆணையை அங்கீகரிக்க வேண்டும், அதன் பின்னரே நாடு கடத்தும் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். இரண்டும் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து நடைபெறவேண்டும்” என வாதிடுகின்றார்.
ஆனந்த கிருஷ்ணன் எதிர்நோக்கு இரண்டு சட்ட சிக்கல்கள்
இந்த சட்ட வாதங்களை வைத்துப் பார்க்கும்போது ஆனந்தகிருஷ்ணன் தற்போது இரண்டுவிதமான சட்ட சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்.
முதலாவது, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருக்கும் கைது ஆணையை எதிர்த்து, அதனை ரத்து செய்யக் கோரி, இந்தியாவின் சிறப்பு நீதிமன்றத்திலேயே அவர் விண்ணப்பிக்கலாம். இதுவரை அவர் அவ்வாறு செய்யவில்லை.
இரண்டாவதாக, இந்திய அரசாங்கம் விடுத்திருக்கும் கைது ஆணையை அந்நாட்டு அதிகாரிகள், மலேசிய தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, வழக்கறிஞர் நாயர் கூறுவது போல், அதனை அங்கீகரிக்க விண்ணப்பிப்பார்களா அல்லது நாடு கடத்தும் விண்ணப்பத்தையும் சமர்ப்பிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்பது!
அவ்வாறு இந்திய அரசு அதிகாரிகள் செய்தால், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ப் மார்ஷல் (படம்) இருவரும் அந்த விண்ணப்பங்களை எதிர்த்து மலேசிய நீதிமன்றங்களில் வழக்காட முடியும். அப்படி வழக்குகள் நடந்தால், அவை நடந்து முடியவும், மேல்முறையீடுகள், விசாரணைகள் என நீண்ட காலம் பிடிக்கலாம்.
எனவே, தற்போது சட்ட நிபுணர்களும், வணிக வட்டாரங்களும் எதிர்பார்த்திருக்கும் கேள்வி, ஆனந்த கிருஷ்ணன், இந்திய நீதிமன்றத்திலேயே தனது கைது ஆணைக்கு எதிராக வழக்கு தொடுத்துப் போராடுவாரா அல்லது அந்த கைது ஆணை மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்வரை காத்திருந்து, தனது சட்டப் போராட்டங்களை மலேசிய நீதிமன்றங்களின் வழி தொடர்வாரா என்பதுதான்!
ஆனந்த கிருஷ்ணன் எதிர்நோக்கும் மேலும் 2 அபாயங்கள்
கைது ஆணை மீதான சட்ட சிக்கல் தவிர்த்து, ஆனந்தகிருஷ்ணன் மேலும் இரண்டு முனைகளில் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
முதலாவது,
இந்திய நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க அவர் மறுக்கின்றார் என்பதைக் காரணம் காட்டி, அவரது இந்திய நிறுவன சொத்துக்களை முடக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார், நாடு திரும்ப மறுக்கின்றார் என்ற காரணங்களின் அடிப்படையில்தான் அண்மையில் இலண்டனில் தஞ்சம் புகுந்திருக்கும் இந்தியக் கோடீஸ்வரர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது.
இரண்டாவது,
ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிரான கைது ஆணையைத் தொடர்ந்து, அதனை இண்டர்போல் எனப்படும் அனைத்துலக போலீஸ் அமைப்பில் இந்திய அரசாங்கம் பதிவு செய்தால், இண்டர்போல் அதனை ‘சிவப்பு முன்அறிவிப்பாக’ (ரெட் நோட்டீஸ்) அறிவிக்கக் கூடும்.
அதனைத் தொடர்ந்து, மற்ற நாடுகளுக்கு ஆனந்த கிருஷ்ணனோ, ரால்ப் மார்ஷலோ பயணம் செய்யும்போது அவர்கள் அந்நாட்டிலேயே கைது செய்யப்படும் அபாயமும், அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முற்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அபாயங்களும் உண்டு.
இந்த சட்ட சிக்கல்கள், அபாயங்களை எதிர்த்து என்ன செய்யப் போகின்றார் ஆனந்த கிருஷ்ணன்?
-இரா.முத்தரசன்