சென்னை – கடந்த செப்டம்பர் 18-ம் தேதி, புழல் சிறையில் மர்ம மரணம் அடைந்த, சுவாதி கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ராம்குமாரின் உடல், 13 நாட்களுக்குப் பிறகு இன்று சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
பிரேதப் பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் உடனிருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை வைத்த கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவரை நியமிக்க உத்தரவிட்டது.
மேலும் அக்டோபர் 1ம் தேதிக்குள் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதனை எதிர்த்து ராம்குமார் தந்தை பரமசிவம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
எனினும், இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், பரமசிவம் மனுவை தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவர் மற்றும் 4 அரசு மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் இன்று பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.