கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து விலகி நின்று தங்களின் தனித்த போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்களில் கணிசமான பிரிவினர், டத்தோ சோதிநாதன் தலைமையில் அண்மையில் மீண்டும் மஇகாவில் இணைந்துள்ளனர்.
இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தொடர்ந்து, சோதிநாதனைப் பின்தொடராமல் இன்னும் பழனிவேல் தரப்பிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர்கள் மற்றும் கிளை, தொகுதித் தலைவர்களிடையே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் குழப்பமும், மாற்று கருத்துகளும் எழுந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சியுள்ள பழனிவேல் தரப்பினரிடையே, கடந்த சில நாட்களாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், புதிய கட்சி ஆரம்பிப்பதா அல்லது மீண்டும் மஇகாவில் சமாதானமாகி இணைவதா அல்லது “பழனிவேல் தரப்பு” என்ற அணியாகவே தொடர்ந்து செயல்படுவதா என மூன்று கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
புதிய கட்சி சாத்தியமா?
சில காரணங்களால் சோதிநாதன் தலைமையில் மீண்டும் மஇகாவுக்கு திரும்புவதற்கு விரும்பாத பழனிவேல் தரப்பினர் புதிய அரசியல் கட்சி ஒன்றை அமைத்துச் செயல்படுவோம் என முடிவெடுத்ததாகக் கூறப்படுகின்றது.
புதிய கட்சி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை பழனிவேல் தரப்பின் ஒரு சில தலைவர்கள் முன்னின்று கவனித்து வருகின்றனர். அண்மையில் இதற்காக அவர்கள் சங்கப் பதிவகம் சென்று அதற்கான விளக்கங்களையும், விவரங்களையும் பெற்று வந்துள்ளதாக பழனிவேல் தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருந்தாலும், எவ்வளவு தூரம் புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவு இருக்கும், தற்போது இருப்பவர்களில் எவ்வளவு பேர் புதிய கட்சியில் வந்து இணைவார்கள் என்பது போன்ற ஐயப்பாடுகள் பழனிவேல் தரப்பினரிடையே பெருகிவருகின்றன.
புதிய கட்சிக்கு பழனிவேல் ஆதரவு உண்டா?
பழனிவேல் தரப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான தலைவர்கள், ஒன்று தங்கள் தரப்புதான் அதிகாரபூர்வ மஇகா என்று அறிவிக்கப்பட வேண்டும் அல்லது மீண்டும் மஇகாவில் இணைந்து தங்களின் அரசியல் பணிகளைத் தொடர வேண்டும் என்பதுதான் அவர்களின் போராட்டமாக இருந்து வந்தது.
ஆனால், பழனிவேல் தரப்புதான் அதிகாரபூர்வ மஇகா என அறிவிக்கப்படுவதற்கான, நீதிமன்றப் போராட்டங்களும், சங்கப் பதிவக மேல்முறையீடுகளும் இனியும் பயன்தராது என்பது தெளிவாகிவிட்டது. அண்மையில் நடந்த மஇகா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோது கூட, பிரதமர் நஜிப் “இந்த மாநாடு மஇகாவுக்கு முக்கியமானது. காரணம், கட்சியின் தலைமைத்துவப் போராட்டம் முடிவுக்கு வந்து, டாக்டர் சுப்ரமணியம் தேசியத் தலைவர் என்பது உறுதியான பின்னர் நடைபெறும் முதல் மாநாடு” என்று கூறியிருந்தார்.
மஇகாவுக்கு மீண்டும் திரும்ப பெரும்பாலோர் ஆர்வம்!
எனவே, பழனிவேல் தரப்பின் மேலும் சில முக்கிய உயர்மட்டத் தலைவர்கள் புதிய அரசியல் கட்சி வேண்டாம், மீண்டும் மஇகாவில் இணைந்து விடுவோம் என்ற முடிவோடு, மீண்டும் தங்களுக்குள் பேச்சு வார்த்தைகளை தொடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்ப, மஇகாவில் இணைந்து விட்ட சோதிநாதனும் “எல்லோரும் வந்து விடுங்கள்” என தொடர்ந்து மற்ற தலைவர்களை வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.
அதே வேளையில், யார் வந்தாலும் நட்புக் கரம் நீட்டுவோம், பழையவற்றை மறந்து புதிய இணக்கமான சூழலை கட்சியில் உருவாக்குவோம் என்ற முனைப்போடு, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் தொடர்ந்து கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை வரவேற்று வருவதால் கூடிய விரைவில் மேலும் பல கிளைத் தலைவர்களும், சில முக்கிய உயர்மட்டத் தலைவர்களும் மஇகாவுக்குத் திரும்பும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்