Home Featured நாடு குமார் அம்மானின் “புதிய தலைமுறை” கட்சி இந்திய சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்துமா?

குமார் அம்மானின் “புதிய தலைமுறை” கட்சி இந்திய சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்துமா?

847
0
SHARE
Ad

kumar-amman-photo

கோலாலம்பூர் – மஇகா, டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தரப்பு, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு என பிளவுபட்டிருந்த கால கட்டத்தின் ஆரம்பத்தில் மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினரான டத்தோ குமார் அம்மான் பழனிவேல் தரப்புக்கு ஆதரவாக இயங்கத் தொடங்கினார்.

கட்சியின் தலைவராக பழனிவேல் இருந்தபோது சிறிது காலம், மஇகாவின் தலைமைச் செயலாளராகவும் அவரால் நியமிக்கப்பட்டிருந்தார் குமார் அம்மான்.

#TamilSchoolmychoice

ஆனால், காலப் போக்கில், பழனிவேல் தரப்பிலும் சேராமல், மீண்டும் மஇகாவுக்கும் திரும்பாமல், இடைப்பட்ட காலத்தில் அரசியல் அரங்கில் அமைதி காத்து வந்தார் அவர்.

கடந்த நவம்பர் 5-ஆம் தேதி டத்தோ சோதிநாதன் தலைமையில் பெரும்பாலான பழனிவேல் தரப்பு கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைகின்றன என்ற அறிவிப்புகள் வெளியான சமயத்தில், குமார் அம்மான் “புதிய தலைமுறை” (Generasi Baru) என்ற புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்துள்ளார், அதற்குத் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.

புதிய தலைமுறை – பல இன உறுப்பியக் கட்சி

கடந்த சில வாரங்களாகவே, குமார் அம்மான் புதிய கட்சி தொடங்கவிருக்கின்றார் என்ற ஆரூடங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது குமார் அம்மானின் புதிய கட்சி அறிவிப்பு. காரணம், பல இன கட்சியாகத் தோற்றம் கண்டுள்ளது ‘புதிய தலைமுறை’.

சீனர் ஒருவரைத் துணைத் தலைவராகவும், சில இந்தியர்களை நிர்வாகத்திலும் இந்தக் கட்சி கொண்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருப்பினும் முன்னாள் மஇகா மத்திய செயலவை உறுப்பினரான ஒருவர் தலைமையேற்றிருப்பதால், புதிய தலைமுறைக் கட்சியும் இந்திய சமுதாயத்தில் அரசியல் ரீதியாக ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா – அத்தகைய நோக்கத்தை இந்தப் புதிய கட்சி கொண்டிருக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அதற்குள்ளாக புதிதாக முளைத்துள்ள இத்தகைய புதிய கட்சிகள் மலேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஏற்கனவே சிறு சிறு கட்சிகளாகச் சிதறிக் கிடக்கும் இந்தியர் கட்சிகள், மலேசிய அரசியலில் வேரூன்ற முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த மஇகா மாநாட்டில், சிறிய இந்தியர் கட்சிகள் மஇகாவுடன் இணைந்து கொள்ள வேண்டும் என பிரதமர் நஜிப்பும் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

இந்நிலையில்,

டத்தோ சோதிநாதன், பழனிவேல் தரப்பில் இயங்கிக் கொண்டிருந்த 627  ஆதரவு கிளைகளுடன் மீண்டும் மஇகாவில் இணைந்திருப்பதன் மூலம், அந்தக் கட்சி மீண்டும் வலிமை பெற்றிருக்கின்றது – ஒன்றுபட்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

இந்திய வாக்குகள் மீது கவனமில்லை

எதிர்க்கட்சிக் கூட்டணிகள் கூட இந்த முறை இந்தியக் கட்சிகள் குறித்தோ, அல்லது இந்திய வாக்குகள் குறித்தோ அதிகமாக அக்கறை பாராட்டவில்லை. காரணம், வரப்போகும் 14-வது பொதுத் தேர்தல் கடந்த தேர்தல்களைப் போல் அல்லாது மலாய் வாக்குகளைக் குறிவைக்கும் மலாய் இன அரசியல் போராட்டக் களமாக மாறப்போகின்றது.

தீவிர இஸ்லாமியக் கொள்கை கொண்ட பாஸ் கட்சி ஒரு புறம், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் அம்னோ கட்சி ஒரு புறம், அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சி இன்னொரு புறம் – இவற்றுக்கிடையில் புதிதாக முளைத்துள்ள மகாதீர்-மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சி என நான்கு முனைகளில் மலாய் வாக்குகளை அதிகமாக ஈர்க்கப் போகும் கட்சி எது என்ற அரசியல் போராட்டத்தின் களம்தான் வரப்போகும் 14-வது பொதுத் தேர்தல்.

இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத் தேவைப்படும் இந்திய வாக்குகளை பெற்றுத் தருவதில் பல இனக்கட்சிகளான பிகேஆர், மற்றும் ஜசெக இரண்டும் முனைப்பு காட்டி வருகின்றன.

எனவே, புதிதாக காட்சிகள் மாறியிருக்கும் மலேசிய அரசியல் களத்தில் எந்த அளவுக்கு குமார் அம்மானின் புதிய கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும், என்பது அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் மூலமே தெரியவரும்.

இதற்கிடையில், ஹிண்ட்ராப் இயக்கமும் அரசியல் கட்சியாக உருவெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன என அதன் தலைவர் பி.வேதமூர்த்தியும் அறிவித்துள்ளார். ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறும் பட்சத்தில் இந்திய வாக்கு வங்கியில் அதனால் பாதிப்பு ஏற்படுத்த முடியுமா?

இந்திய வாக்காளர்களிடம் முன்பு போல் ஹிண்ட்ராப் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க முடியுமா?

என்பதெல்லாம், 14-வது பொதுத் தேர்தலை நோக்கிக் காத்திருக்கும் வேளையில், அடுத்தடுத்து மலேசிய இந்தியர் சார்பு அரசியல் அரங்கில் எழுந்திருக்கும் கேள்விகளாகும்.

-இரா.முத்தரசன்