வாஷிங்டன்- அதிர்ச்சி முடிவைத் தந்த இந்த ஆண்டுக்கான அதிபர் தேர்தல் மறக்க முடியாததாக அமைந்ததைப் போன்று, அமெரிக்க காங்கிரஸ், செனட் அவைகளுக்கான தேர்தல்களும் இந்த முறை இந்திய அமெரிக்கர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கின்றது.
முதன் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் செனட்டராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 இந்திய அமெரிக்கர்கள் காங்கிரஸ் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காரணத்தால் தற்போது அமெரிக்க அரசியலில் இந்திய அலை வீசத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, போபி ஜிண்டால் அமெரிக்க மாநிலம் ஒன்றின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை புரிந்திருக்கின்றார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் யார்?
பிரமிளா ஜெயபால் என்ற 51 வயது பெண்மணி சியாட்டல் நகரிலிருந்து காங்கிரஸ் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்க காங்கிரசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது இந்திய-அமெரிக்கப் பெண்மணியாகத் திகழ்கின்றார்.
பிரமிளாவும் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவராவார். ஐந்து வயதில் தாய்நாட்டை விட்டு கிளம்பிய பிரமிளா சிங்கப்பூர், இந்தோனிசியா நாடுகளில் வாழ்ந்து விட்டு பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறியவராவார்.
“இந்தியாவுக்கான புனிதப் பயணம் – ஒரு பெண் தாய்நாட்டுக்கு மறுபயணம் மேற்கொள்கின்றார்” – “Pilgrimage to India: A Woman Revisits Her Homeland” – என்ற நூலை 2000ஆம் ஆண்டில் எழுதி பதிப்பித்துள்ளார் பிரமிளா.
மற்றொருவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவராவார். கலிபோர்னியா மாநிலத்திலிருந்து ரோ கன்னா, அமி பெரா ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அமி பெரா தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இதைத் தொடர்ந்து இவர் அமெரிக்க காங்கிரஸ் அவையில் நீண்ட காலமாக பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.