கோலாலம்பூர் – மாயமான எம்எச்370 விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய, அவ்விமானத்தில் பயணம் செய்தவர்களது குடும்பத்தினர் மடகாஸ்கர் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
‘குரல் 370’ என்ற பெயரிலான எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினர் உருவாக்கியுள்ள சங்கம் இது குறித்து கூறுகையில், இதுவரைக் கண்டறியப்பட்ட பாகங்கள் அனைத்தும் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்பகுதியில் இருந்து தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை அதிகாரிகளின் தேடுதல் பணிகளில் முறையோ அல்லது ஒருங்கிணைப்போ இல்லை” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் தேடுதல் பணியில் எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினர் ஈடுபட்டால் நிச்சயமாக விடை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கடற்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கருதப்படும் இடத்தில் தற்போது தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனினும், விரைவில் அப்பணி நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.