Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்’ – ஹாலிவுட் ஆக்சன் மசாலா!

திரைவிமர்சனம்: ‘ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்’ – ஹாலிவுட் ஆக்சன் மசாலா!

3586
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘ட்ரிப்பிள் எக்ஸ்’, ‘ட்ரிப்பிள் எக்ஸ் ஸ்டேட்டட் ஆஃப் யூனியன்’ படங்களின் வரிசையில், மூன்றாவது பாகமாக வின் டீசல் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்’.  நம்ம பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அறிமுகமாகியிருக்கும் முதல் ஹாலிவுட் படம். இதை விட என்ன சுவாரசியம் வேண்டும்? சரி.. கதைக்கு வருவோம்..

விண்வெளியில் இருக்கும் செயற்கைக் கோள்களை ‘பண்டோரா பாக்ஸ்’ என்ற கருவி மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதை பூமியில் விழ வைத்து, அழிவை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சி செய்கின்றன. பிரேசிலில் அப்படி ஒரு அழிவும் நிகழ்த்தப்படுகின்றது.

இந்நிலையில், அந்த ‘பண்டோரா பாக்சை’ டோனி யென், தீபிகா படுகோனே, டோனி ஜா உள்ளிட்ட 4 பேர் கொண்டு குழு சிஜஏ தலைமையகத்தில் இருந்து கடத்திச் செல்கிறது.

#TamilSchoolmychoice

அவர்களைக் கண்டறிய சிஐஏ ஏஜெண்டான டோனி கோலெட், முன்னாள் ட்ரிப்பிள் எக்ஸ் அமைப்பின் தலைவர் சான்டெர் கேஜின் (வின் டீசலின்) உதவியை நாடுகிறார்.முதலில் உதவி செய்ய மறுக்கும் வின் டீசல் பிறகு ஒப்புக் கொண்டு களத்தில் இறங்குகிறார். இந்த முயற்சியில் தனக்குத் துணையாக தான் தேர்ந்தெடுப்பவர்கள் தான் உடன் வர வேண்டும் என்று வின் டீசல் கட்டுப்பாடு விதிக்கிறார்.

அதன் படி வின்டீசலுடன் துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியான ரூபி ரோஸ், காட்டுமிராண்டித்தனமாக கார் ஓட்டும் ரோரி, டிஜே கிரிஸ் வு ஆகிய மூவரும் இணைகின்றனர்.

தனது குழுவுடன் பிலிப்பைன்ஸ் செல்லும் வின் டீசல் அந்த ‘பண்டோரா பாக்சை’ கண்டுபிடித்தாரா?, அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றினாரா? என்பதை அதிரடி ஆக்சன் காட்சிகளின் வழி சொல்லியிருக்கும் ஹாலிவுட் மசாலா படமாக ‘ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்’ அமைந்திருக்கிறது.

‘பார்ஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7’ -ல் கொஞ்சம் கடுகடுவென நடித்திருந்த வின் டீசல், இப்படத்தில் தொடக்கம் முதல் முடிவு வரை கலகலப்பாக நடித்திருக்கிறார். முகபாவனைகளையும், உடல்மொழியையும் மாற்றி காட்சிக்குக் காட்சி ரசிக்க வைக்கிறார். அதோடு, சுமார் 60, 70 அடி உயர டவரில் இருந்து குதிப்பது, மெய்சிலிர்க்கும் வகையில் ஸ்கேட்டிங் செய்வது, விமானத்தில் இருந்து குதிப்பது என ஆக்சன் காட்சிகளிலும் அதிர வைத்திருக்கிறார்.

அதே போல், வின் டீசலுக்கு நிகராக அவருடன் மோதும் அளவிற்கு தீபிகா படுகோனேவிற்கும் சமமான காட்சிகள் கொடுத்திருக்கிறார்கள். சில காட்சிகளில் கொஞ்சம் கவர்ச்சியாக தெரிந்தாலும் கூட, ஆடை விசயத்தில் அடக்கியே வாசித்திருக்கிறார் தீபிகா.

Deepika-Padukoneஒரு கட்டத்தில் வின்டீசல் குழுவும், தீபிகா குழுவும் இணைந்து செயல்படும் போது, அனல் பறக்கும் அளவிற்கு சேசிங் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. காட்சி ஒன்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வந்து தாக்குவது ரசிகனை இருக்கை நுனிக்கு வர வைக்கிறது.

ரூசெல் கார்பெண்டரின் ஒளிப்பதிவில், பிரியன் டைலரின் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்ட உதவியிருக்கிறது.கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மார் சிறப்புத் தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். அநேகமாக அடுத்த ட்ரிப்பிள் எக்ஸ் அவராக இருக்கலாம்.

மொத்தத்தில், ஆக்சன் பட ரசிகர்களை மகிழ்விக்க, கொஞ்சம் மசாலாவையும் சேர்த்து படைத்திருக்கும், ‘ட்ரிப்பிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் சான்டெர் கேஜ்’ பார்த்து ரசிக்க வேண்டிய படம் தான்.

– ஃபீனிக்ஸ்தாசன்