கோலாலம்பூர் – 2016-ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் வேளையில், தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றுப் பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை தேடித் தந்த அனைத்து மாணவர்களுக்கும் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
“சிறப்பான தேர்வு முடிவுகளைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பின்னணியில் நிச்சயம் அவர்களது அயராத உழைப்பும், தளராத விடாமுயற்சியும்தான் காரணமாக இருக்கும். விடாமுயற்சியும் கடின உழைப்பும் வெற்றிப் பாதைக்குச் செல்வதற்கான ஊன்றுகோல்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இந்த தேர்வு முடிவானது மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட தளங்கள் மட்டுமின்றி அவர்களது மேற்கல்வியைத் தொடர உயர்கல்விக்கூடங்களில் காலடி எடுத்து வைப்பதற்கான முதல் படியும் ஆகும்” என்றும் டாக்டர் சுப்ரா நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
ஆகவே, மாணவர்கள் தங்களின் மேற்கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மிகச் சரியான வழியைத் தேர்தெடுக்க வேண்டும் என்றும் இச்சமயத்தில் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
“அரசு இயக்கங்கள், அரசு சாரா இயக்கங்கள், சமூக அமைப்புகள் என பல தரப்பினர் உயர் கல்விக்கான வழிகாட்டிக் கருத்தரங்கை ஆங்காங்கு நடத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி பிள்ளைகளின் எதிர்காலத்திற்குத் தேவையான, விருப்பமான, சரியான முடிவை எடுக்க வேண்டும். தொடர்ந்து, தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற முடியாத மாணவர்கள் மனம் தளர்ந்து போகாமல், தொழில் திறன் பயிற்சிகளின் வழி தங்களை மேம்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும். தற்பொழுது நாட்டில் தொழில் திறன் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் அதிகளவு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள் நிறைவு செய்யப்படாமலேயெ இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இத்தகைய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடையவும் வாழ்த்துகிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.