ஈப்போ – மலேசியாவில் முக்கிய நகரங்கள் பலவற்றில், சிறுவர், சிறுமியர் கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் விற்பனை செய்வதைக் கண்டிருப்போம்.
ஆனால், அவற்றை வாங்கவோ அல்லது அவர்களுக்கு நன்கொடை கொடுக்கவோ வேண்டாம் என மலேசியக் காவல்துறை எச்சரிக்கிறது.
காரணம், நாம் அவர்களிடமிருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் தான் குழந்தைகள் கடத்தப்படுவதை நிறுத்த முடியும் என்கிறது காவல்துறை.
இது குறித்து பேராக் மாநில குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ கான் தியான் கீ கூறுகையில், “குழந்தைகள் பிச்சையெடுப்பதையோ அல்லது வியாபாரம் செய்வதையோ கண்டால், உடனே அதனைப் புகைப்படம் எடுத்து, தகுந்த தகவல்களுடன் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அவர்களுக்கு பணம் மட்டும் கொடுக்காதீர்கள். காரணம், அது குழந்தைகளைக் கடத்தும் கும்பலுக்கு வசதியாக அமைந்து அவர்கள் மேலும் பல குழந்தைகளைக் கடத்தி அது போல் பிச்சையெடுக்க வைப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு மட்டும் அது போல் மூன்று சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், பணத்திற்காகக் குழந்தைகளைக் கடத்தி பிச்சையெடுக்க வைத்திருக்க்கிறார்கள் என்றும் கான் தியான் கீ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த வாரம் சனிக்கிழமை பெங்காலான் உலுவில் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி தொழிலாளர்களாக மாற்றிய சம்பவமும் கண்டுபிடிக்கப்பட்டதாக கான் தியான் கீ தெரிவித்தார்.