பேங்காக் – தாய்லாந்தில் சோன்பூரி என்ற இடத்தில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் சிறிய குளத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அரிய வகை கடல் ஆமையான ஓம்சின் (வயது 25) இன்று செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தது.
அப்பூங்காவிற்கு வரும் மக்கள் அதிருஷ்டம் என்ற பெயரில், ஆமை வசித்த குளத்தில் காசுகளை வீசி பிரார்த்தனை செய்வது வழக்கம். அவ்வாறு காசுகளை வீசி பிராத்தனை செய்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்று பலராலும் நம்பப்பட்டு வந்ததால், தினசரி
அங்கு நிறைய மக்கள் வந்து காசுகளை குளத்தில் வீசிப் பிராத்தனை செய்துவந்தனர். ஆனால் மக்களுக்கு அதிருஷ்டத்தைத் தந்த அந்த நம்பிக்கை அக்குளத்தில் வசித்த ஆமைக்கு துரதிருஷ்டத்தையே தந்தது.
அண்மையில் உடல்நலக்குறைவால் அந்த ஆமை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அதன் வயிற்றைச் சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். அதன் வயிற்றில் சுமார் 5 கிலோ எடையில் 1000 காசுகள் இருந்து, அதன் இரைப்பையை பதம் பார்த்துக் கொண்டிருந்தது.
மருத்துவர்கள் அதனை அறுவைச் சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியும் கூட, இரத்தத்தில் தொற்று ஏற்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருந்து வந்தது.இந்நிலையில், இன்று காலை அந்த ஆமை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக அதற்குச் சிகிச்சையளித்து வந்த கால்நடை மருத்துவர் நந்தாரிகா சான்சுய் கண்ணீருடன் தெரிவித்தார்.