கோலாலம்பூர் – அல் இஸ்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை, அவரது கணவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை இரவு சந்தித்தார்.
ஓரினப்புணர்ச்சி வழக்கில் தண்டனை பெற்று, சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை, தகுந்த பாதுகாப்போடு சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
தனது தாயார் வான் அசிசாவைச் சந்தித்த தனது தந்தை அன்வார் இப்ராகிம், சுமார் 45 நிமிடங்கள் அவருடன் நேரம் செலவிட்டதாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், அன்வாரின் மகளுமான நூருல் இசா கூறியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்திருக்கிறது.
#TamilSchoolmychoice
இதனிடையே, வான் அசிசாவை நேற்று அவரது குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட்டதோடு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் மனைவி, துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா மொகமட் அலியும் பார்வையிட்டார்.
வான் அசிசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
இதனிடையே, வான் அசிசா நலமாக இருப்பதாக, அவரின் பத்திரிக்கை செயலாளர் ரோட்சியா இஸ்மாயில் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருக்கிறது.