கோலாலம்பூர் – காய்ச்சல் காரணமாகக் கிள்ளான் தெங்கு அம்பு வான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி லாரணியா வில்பெர்ட், திடீரென மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கிறது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் உண்மை நிலையை அறிய தாங்கள் விசாரணை நடத்தப் போவதாக மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) அறிவித்திருக்கிறது.
கடந்த மார்ச் 13-ம் தேதி முதல், சுமார் 40 டிகிரி அளவிற்கு கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த லாரணியாவை, அவரது தாயார் பிரேம்ஸ்ரீ, கிள்ளான் பொட்டானிக் அரசு மருத்துவமனை மற்றும் அரசாங்க, தனியார் மருந்தகங்கள் எனப் பல்வேறு இடங்களில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் சிறுமியின் காய்ச்சல் குணமாகாமல் தொடர்ந்து உடல்நிலை மோசமாகி வந்ததால், கடந்த மார்ச் 20-ம் தேதி, கிள்ளான் தெங்கு அம்பு வான் ரஹிமா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு கொண்டு செல்லப்படும் போது லாரண்யா சுயநினைவுடன் தான் இருந்ததாகவும், சிகிச்சைக்காகச் சேர்த்துவிட்டு காத்திருந்த போது அவரைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர் வரும் வழியிலேயே லாரணியா இறந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியில் லாரணியா சுயநினைவுடன் தான் இருந்ததாகவும், அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவரது வயிறு மேலே ஏறி மூச்சு விடுவதைத் தான் கவனித்ததாகவும் பிரேம்ஸ்ரீ ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்.
மேலும், முதல் முறை அம்மருத்துவமனைக்குக் கொண்டு வந்த போதே மருத்துவர்கள் முறையாகக் கவனித்திருந்தால், இந்நேரம் தன் மகள் உயிரோடு இருந்திருப்பார் என பிரேம்ஸ்ரீ கண்ணீருடன் கூறுகிறார்.
இந்நிலையில், நம்பிக்கை அமைப்பு, பிரேம்ஸ்ரீ ஆகியோரிடமிருந்து மகஜரைப் பெற்ற சுஹாகாம், இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மையைக் கண்டறியவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
லாரணியா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட போது, அங்கு பதிவான இரகசியக் கேமரா காட்சிகளை பார்க்கும் படி பிரேம்ஸ்ரீ அளித்திருக்கும் மகஜரில் கூறப்பட்டிருக்கிறது.