கோலாலம்பூர் – ஏர் ஆசியா நிறுவனம் விமான சேவைகளிலும், வணிக முயற்சிகளிலும் மட்டும் முன்னணி வகிப்பதில்லை – மாறாக, தனது போட்டி நிறுவனங்களுக்கு எதிராக விளம்பரம் போட்டு கலாய்ப்பதிலும், கிண்டல் செய்வதிலும் முன்னணி வகிக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
மலிண்டோ ஏர் நிறுவனத்தில் விமானப் பணிப் பெண் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்களிடம் மேலாடை கழட்டச் சொன்ன விவகாரம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடியாக, ஏர் ஆசியா நிறுவனமும் விளம்பரம் ஒன்றைச் செய்திருக்கிறது.
“நாங்கள் உங்களை ஆடை களையச் சொல்ல மாட்டோம். மாறாக உங்கள் ஆடைகளை மேல் இழுத்து மூடிக் கொண்டு உலகின் மிகச் சிறந்த மலிவு விலை விமான நிறுவனத்தில் இணையுங்கள்” என்ற வாசகங்களுடன் ஏர் ஆசியா தனது விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது.
ஏர் மலிண்டோவின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், இந்த விளம்பரத்தைப் பார்க்கிறவர்களுக்கு இது ஏர் மலிண்டோவைக் கிண்டல் செய்யும் விளம்பரம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.
இதே போன்று கடந்த 2014-ஆம் ஆண்டில், மாஸ் விமான சேவை ஒன்றில் பரிமாறப்பட்ட நாசி லெமாக் உணவு ‘முழுமையாக’ இல்லை என சமையல் கலை நிபுணரான பயணி ஒருவர் சமூக வலைத் தளங்களில் பதிவு போட, அதைத் தொடர்ந்து ஏர் ஆசியாவும் “நாங்கள் பரிமாறும் நாசி லெமாக் முழுமையாக இருக்கும்” என விளம்பரம் செய்து மாஸ் நிறுவனத்தைக் கிண்டலடித்தது.
2014-இல் மாஸ் நிறுவனத்தைக் கிண்டலடித்து ஏர் ஆசியா வெளியிட்ட விளம்பரம்…
இப்போதோ தனக்குக் கிடைத்த இன்னொரு வாய்ப்பைப் பயன்படுத்தி மலிண்டோவைக் கிண்டலடித்திருக்கிறது.