Home கருத்தாய்வு இலங்கைத் தீர்மானம்- மலேசியாவின் நடுநிலைமை நியாயமா?

இலங்கைத் தீர்மானம்- மலேசியாவின் நடுநிலைமை நியாயமா?

802
0
SHARE
Ad

Sri Lanka Civil War

ஜெனிவா, மார்ச் 22 –  இலங்கையில் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

47 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ள ஜெனிவாவில் உள்ள பொதுப்பேரவையின் மனித உரிமை மன்றத்தில், கடந்த புதன்கிழமை அமெரிக்கா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

#TamilSchoolmychoice

இலங்கைப்போர் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்படவேண்டும்- தீர்மானத்தில் வேண்டுகோள்

ஓர் அனைத்துலக விசாரணை, இலங்கைப்போர் குறித்து நடத்தப்படவேண்டும் என்று முதலில் இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டபோதும், பல சுற்றுகள் நடந்த விவாதத்திற்குப்பின், மென்மையான முறையில் அத்தீர்மானம் திருத்தப்பட்டது.

இலங்கையின் 13வது அரசியலமைப்புச்சட்டம் திருத்தப்படவேண்டும்,வடக்கு மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் மற்றும் இன வேறுபாடின்றி அனைவரும் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தியும், அந்தப் பரிந்துரைகள் அமெரிக்கத் தீர்மானத்தில், சேர்த்துக்கொள்ளப்படாமலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மக்களின் உணர்வுகளை மதியாமல் மலேசியா நடுநிலை வகித்தது ஏன்?

கடந்த 2012ல் இதே போன்று ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, மலேசியா அதில் வாக்களிக்கவில்லை என்பதும் நடுநிலை வகித்தது என்பதும் தெரிந்ததே.

ஆனால் இம்முறையும் மலேசியா, ஜப்பான் மற்றும் உலக வரைபடத்தில் தேடிக்கண்டுபிடிக்கப்படவேண்டிய சில நாடுகளோடு நடுநிலை வகித்துள்ளதாம்.

இலங்கைக்கு எதிராக அவ்வப்போது கண்டனத் தீர்மானங்களை நமது உள்நாட்டு அமைப்புகள் நிறைவேற்றியதும், ஆகக்கடைசியாக இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றச்சொல்லி ஜிபிஎம் என்ற உள்நாட்டு அமைப்பு வலியுறுத்தியதும்  அரசின் கவனத்திற்கு செல்லவில்லையா?

அல்லது அழிவது இலங்கைத் தமிழினம் தானே? நமக்கென்ன- என்ற அலட்சியமா?

மனிதாபிமானமற்ற மலேசியாவின் போக்கால்  மலேசியர்களுக்கு அவமானமே!

மதசார்பற்ற நாடு என்றும்,இன பாகுபாடு பார்க்காத அரசு என்றும் பெருமை பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு ஓர் இனப்படுகொலைக்கு எதிரானத் தீர்மானத்திற்கு நடுநிலை வகித்த மலேசியாவால் மிஞ்சியது அவமானமே.

மனிதாபிமானமுள்ள யாராலும் இச்செயலை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதற்கு மலேசியா எதிர்த்தே வாக்களித்திருக்கலாம். இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த படுபாதகங்களை பல்வேறு தகவல் ஊடகங்கள் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்னரும், உள்நாட்டு தமிழ் அமைப்புக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்த பின்னரும் நடுநிலைமை என்ற முடிவை மலேசியா எடுப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.

உலக அரங்கில் இனப் படுகொலைகளுக்கு எதிரான – அவை எந்த நாட்டில் நடந்திருந்தாலும் – தனது கண்டனங்களைப் பதிவு செய்ய மலேசியாவுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை மலேசியா தவறவிட்டு விட்டதுதான் என்றுதான் கூற வேண்டும்.

 சுவாராம் மனித உரிமை அமைப்பும் கண்டனம்

Arumugam-lawyer-sliderமலேசியாவிலுள்ள சுவாராம் எனப்படும் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பும், மலேசியாவின் நடுநிலைமைக் கொள்கை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தீர்மானம் குறித்து கருத்துரைத்த சுவாராம் தலைவர் கா.ஆறுமுகம் (படம்) மலேசியாவின் நடுநிலைமைக் கொள்கை ஏமாற்றமளிக்கிறது என்றும் நமது நாட்டின் சுவாராம் அமைப்பும் மற்றும் பல தமிழர் அமைப்புக்களும் இலங்கை தீர்மானம் குறித்தும் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும் தங்களின் பலத்த கண்டனங்களை பதிவு செய்திருந்தும் மலேசிய அரசாங்கம் இலங்கையைக் கண்டிக்காமல் தீர்மானத்தின் மீது நடுநிலைமை எடுத்திருப்பது குறித்து கா.ஆறுமுகம் கடுமையாக விமர்சித்திருக்கின்றார்.

13வது பொதுத்தேர்தலில் மலேசியாவின் நடுநிலைமை வாக்குகளில் பிரதிபலிக்குமா?

அவ்வாறு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தால் அதன் மூலம் நெருங்கி வரும் பொதுத் தேர்தலில் கணிசமான உள்நாட்டுத் தமிழர்களின் ஆதரவையும் நடப்பு தேசிய முன்னணி அரசாங்கம் பெற்றிருக்க முடியும்.

வரும் 13வது பொதுத்தேர்தலில்  வாக்களிக்கப் போகும் தமிழ் வாக்காளர்களில் பெரும்பாலோர் அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அக்கறை கொண்டவர்கள் – மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மிகவும் எதிர்பார்த்திருந்தார்கள்!

அந்த தீர்மானத்தை எதிர்த்திருந்தால் அதனால் தேசிய முன்னணி வரும் பொதுத் தேர்தலில் மலேசியத் தமிழர்களின் கணிசமான வாக்குகளை இழந்திருக்கும்.

அந்த வகையில் நடுநிலைமை என்ற நிலைப்பாட்டால் தேசிய முன்னணி அரசு மலேசியத் தமிழர்களின் வெறுப்பை சம்பாதிக்கவில்லையே தவிர, மாறாக ஆதரவைச் சம்பாதித்துள்ளது என்று நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது.

இலங்கைத் தீர்மானத்தின் மீது மலேசியா எடுத்திருந்த நடுநிலைமை என்ற நிலைப்பாட்டால் மலேசியத் தமிழர்கள் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்பதை நாம் பதிவு செய்தே ஆக வேண்டும்.

ஆனால், இதனால் தேசிய முன்னணி அரசிற்கு கிடைக்க வேண்டிய – தேசிய முன்னணி அரசு மிகவும் எதிர்பார்த்திருக்கும் – தமிழர் வாக்குகள் எந்த அளவுக்கு பாதிப்படையும் என்பதை 13வது பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாகத் தொடங்கும் போதுதான் நாம் தெளிவாக கணிக்க முடியும்!

-சா. விக்னேஸ்வரி