ஜெனிவா, மார்ச் 28 – இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது அப்பாவித் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை நடத்திய இந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அந்நாட்டின் மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று நிறைவேறியது. இதை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான் (படம்) வரவேற்றுள்ளார்.
இத்தீர்மானம் குறித்தும், இலங்கைத் தமிழர் பற்றியும் அவர் கூறியதாவது:-
“இலங்கைக்கு, சர்வதேச நீதி விசாரணை குறித்த அழுத்தம் கொடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற இத்தனை ஆண்டுகளில் உண்மை என்ன என்பதை உலகம் அறிந்து கொண்டால் அதுவே இலங்கைத் தமிழர்களுக்கான வெற்றியாகும்.
இலங்கை அரசின் போர் குற்ற விசாரணை சுதந்திரமாகவும், நம்பகத்தன்மை இன்றியும் நடத்தியதன் விளைவாகவே இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. அதிபர் ராஜபக்சே இந்த புதிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் நாட்டின் கடந்த கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார் என நம்புகிறேன். இந்த தீர்மானத்தின் வெற்றிக்கு பிரிட்டனின் பங்களிப்பு குறித்து பெருமிதமாக உள்ளது” என்று கேமரான் கூறியுள்ளார்.